டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப்பிரதேசம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் கடுமையான வெப்ப பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. பல இடங்களில் 50° செல்சியஸ்-க்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வரும் சூழலில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அதீத வெப்பநிலை காரணமாக 75க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில், 25 பேர் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் ஆவர். அதிகபட்சமாக ஒடிசாவில் 36 பேர் உயிரிழந்துள்ளனர் உத்தரப்பிரதேசத்தில் 20 பேரும் பீகாரில் 14 பேரும் ஜார்க்கண்டில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தை பொருத்தவரை மிர்சாப்பூர் மாவட்டத்தில் 13 நபர்களும் சோன்பந்திரா மாவட்டத்தில் 2 நபர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பீகார் மாநிலத்தின் போஜ்பூரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர.
ஜார்கண்ட் மாநிலத்தில் சுமார் 1300க்கும் அதிகமானோர் அதீத வெப்பநிலை சார்ந்த உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.