திரைப்படங்களில் வரும் காட்சியை மிஞ்சுவது போல, ஒரு மருத்துவமனைக்குள் அதுவும் அவசரப்பிரிவில் நோயாளிகள் இருபுறமும் படுத்திருக்க, சில நர்ஸ்கள் ஆங்காங்கே நோயாளிகளை ஸ்டெக்சரில் வைத்து தள்ளிக்கொண்டிருக்க, ஒரு போலீஸ் வேன் ஒன்று மருத்துவமனைக்குள் புகுந்து குற்றவாளியை கைது செய்கிறது. “அட... போலீஸாரின் கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையேப்பா... ”என்று சொல்லலாம் போல் இருக்கிறது இந்த காணொளி.
இந்த சம்பவம் ரிஷிகேஷ் AIIMS மருத்துவமனை நடந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெண் மருத்துவர் ஒருவரை, நர்ஸிங் அதிகாரியான சதீஷ்குமார் என்பவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் அங்கு பணிபுரியும் பெண் டாக்டர்களுக்கு ஆபாசமான எஸ் எம் எஸ் அனுப்பியதாக ரிஷிகேஷ் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சதீஷ் குமாரின் இத்தகைய செயல் மருத்துவமனை மருத்துவர்களின் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சதீஷ்குமாரை கைது செய்யக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்று நினைத்த போலீசார் சற்றும் தாமதிக்காமல் வண்டியை நேராக மருத்துவமனைக்குள் விட்டு, சதீஷ்குமாரின் இடத்திற்கு சென்று அவரை கைது செய்தனர். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை இங்கே காணலாம்...
என்னதான் குற்றவாளியை பிடிக்கும் பணி என்றாலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இதை காவல்துறை செய்திருக்கலாம் என்பதே பலரின் எண்ணமாகவும் உள்ளது. அதிலும் மருத்துவமனையில் ஒவ்வொரு நோயாளியும் உடல், மனநல சிக்கலில் சிகிச்சையில் அவசரப்பிரிவில் இருக்கும்போது சைரன் வைத்த வண்டியில் சென்று, பரபரப்பை ஏற்படுத்துவது நிச்சயம் சரியான வழிமுறை அல்லதான்! அந்த சத்தமும், பரபரப்பும் நோயாளிகளுக்கு தொந்தரவுதான்!