மூத்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மும்பை மருத்துவமனையில் காலமானார்.
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர்(67). 1970-ம் ஆண்டில் 'மேரா நாம் ஜோக்கர், படத்தில் அறிமுகமானார். இதற்கு அவர் தேசிய விருதும் வாங்கினார். 1973-ல் வெளியான ' பாபி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர். ரிஷி கபூர் 2018-ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் ஒரு வருடம் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார். சிகிச்சைக்கு பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் நியூயார்க்கில் இருந்து இந்தியா திரும்பினார்.
இந்நிலையில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் ரிஷி கபூர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக அவரது சகோதரர் ரந்தீர் கபூர் தெரிவித்தார். இதையடுத்து ரிஷி கபூர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ரிஷி கபூரின் கடைசி பாலிவுட் திரைப்படம் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து 2018 ஆம் ஆண்டு வெளியான, 102 நாட் அவுட் என்ற திரைப்படமாகும். ரிஷி கபூர் கடைசியாக நெட்ஃபிலிக்ஸில் வெளியான தி பாடி என்ற வலைத் தொடரில் நடித்திருந்தார். ரிஷி கபூருக்கு மனைவி மற்றும் மகன் ரன்பீர் கபூர் மற்றும் மகள் ரித்திமா கபூர் சாஹ்னி ஆகியோர் உள்ளனர்.