ஹிஜாப் அணிவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் வராது என கர்நாடகா அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது.
கர்நாடகாவில் உள்ள சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கு ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து, ஹிஜாப் அணிந்து செல்வதற்கு அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் தடை விதித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை இரு வாரங்களுக்கு முன்பு விசாரித்த நீதிமன்றம், "இந்த விவகாரத்தில் தீர்ப்பு வெளியாகும் வரை கல்வி நிலையங்களுக்கு மாணவர்கள் மதம் சார்ந்த உடைகளை அணிந்து செல்லக் கூடாது" என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை தினமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெற்ற விசாரணையின்போது, கர்நாடகா அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நவாத்கி ஆஜராகி வாதாடினார். அவர் முன்வைத்த வாதம்:
ஹிஜாப் அணிவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) (a) பிரிவு மற்றும் 25-வது பிரிவுகளின் கீழ் வருவதாக மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது. இது மிகவும் தவறானது மட்டுமல்லாமல், தற்போது நடைபெற்று வரும் பிரச்சினைக்கு முற்றிலும் முரணானது. 19 (1) (a) சட்டப்பிரிவானது கருத்து சுதந்திரம் உள்ளிட்டவற்றை உறுதி செய்கிறது. அதனால், ஹிஜாப் அணியும் விவகாரத்தை அந்த சட்டப்பிரிவின் கீழ் வேண்டுமானால் கொண்டு வர முடியும். ஆனால், 25-வது சட்டப்பிரிவின் கீழ் அதனை சேர்க்கக் கூடாது. ஏனெனில், 25-வது சட்டப்பிரிவின் 11-ம் விதியானது, கல்வி நிலையங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் சட்டத்திட்டத்துக்கு உட்பட்டு ஆடை உள்ளிட்ட விவகாரங்களில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வழிவகை செய்கிறது. இவ்வாறு அவர் வாதிட்டார்.