நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற ரிக் தயாரிப்பு நிறுவனமான பி ஆர் டி ரிக் நிறுவனம் 360 டிகிரியிலும் சுழல கூடிய, பாறைகளை ஆறு இன்ச் அளவுக்கு உடைத்து 80 மீட்டர் துளை ஏற்படுத்தக்கூடிய, கடுமையான பாறைகளையும் உடைக்கக்கூடிய, பி ஆர் டி ஜிடி5 என்ற ரிக் வாகனத்தை தயாரித்துள்ளது.
இதனை 85 லட்சம் கொடுத்து வாங்கிய திருச்செங்கோடு மண்டக பாளையம் பகுதியைச் சேர்ந்த தரணி ஜியோ டெக் என்ற நிறுவனம், மலைகளை உடைத்து சுரங்கப் பாதைகள் அமைக்க ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட கடுமையான மலைப்பகுதிகளில் பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் அமைக்கப் பட்ட சுரங்க பாதையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டு 40-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளே இருப்பவர்களின் நிலை என்ன அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து ஆக்ஸிஜன் ஆகியவற்றை கொடுப்பது எப்படி என்பது குறித்து யோசித்து வந்த நிலையில், தரணி ஜியோ டெக் நிறுவனத்தை மீட்பு குழுவினர் அணுகினர். 6 இன்ச் அகலத்தில் சுமார் 170 அடி ஆழத்தில் துளையமைத்து, சிமென்ட்ரி டெக்னாலஜி மூலம் துளை அமைத்துச் செல்லும்போது கேசிங் பைப்பையும் உடன் அனுப்பினர்.
அதன் மூலம் எந்த சரிவும் ஏற்படாமல் ஆழத்தில் சிக்கி இருந்தவர்களை எட்டும் வகையில் செய்து, அதன் மூலம் ஆறு அங்குல குழாய்களுக்குள் உணவு, மருந்து மற்றும் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் சுரங்கப்பாதைக்குள் சிக்கி இருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களை மாற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்க முடியும் என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.