அக்டோபர் 2024: 1 பில்லியன் டாலரை தாண்டிய அரிசி ஏற்றுமதி!

கடந்த ஒரே மாதத்தில் (அக்டோபர்) 1 பில்லியன் டாலர் அந்நிய செலவாணி ஈட்டப்பட்டுள்ளது.
அரிசி
அரிசிபுதியதலைமுறை
Published on

கட்டுப்பாடுகள் யாவும் நீக்கப்பட்டுள்ள நிலையில், அரிசி ஏற்றுமதி வேகமாக உயர்ந்து அக்டோபர் மாதத்தில் ஒரு பில்லியன் டாலர் என்கிற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்றுமதி வரி மற்றும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை உள்ளிட்ட பல்வேறு தடைகள் நீக்கப்பட்டதால், அரிசி ஏற்றுமதி வேகமாக உயர்ந்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர். 

முன்னதாக மத்திய அரசின் ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திடம் அரிசி இருப்பு போதுமான அளவு இருப்பதால், மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கியது.

கட்டுப்பாடு எப்போது விதிக்கப்பட்டது?

கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு, உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக அரிசி ஏற்றுமதிக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. உக்ரைன் போர் காரணமாகவும் சர்வதேச சந்தையில் உணவுப்பொருட்கள் விலை அதிகரித்ததால், இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. உணவுப் பொருட்கள் மகசூல் கடந்த இரண்டு வருடங்களாக அதிகரித்து வருவதால், கிடங்குகளில் போதிய உணவு தானியங்கள் உள்ளன எனவும், ஆகவே தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து ‘அரசு அனுமதியுடன் மட்டுமே அரிசி ஏற்றுமதி செய்ய வேண்டும், 20% அரிசி ஏற்றுமதி வரி மற்றும் ஒரு டன் அரிசி 490 டாலருக்கு குறைவாக இருக்கக் கூடாது’ என விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

உயரந்த அரிசி ஏற்றுமதி!

இதன் காரணமாக அக்டோபர் மாதத்தில் அரிசி ஏற்றுமதி ஒரு பில்லியன் டாலரை கடந்துள்ளது எனவும் வரும் மாதங்களிலும் அரிசி ஏற்றுமதி கணிசமாக இருக்கும் எனவும் மத்திய அரசு அதிகாரிகள் கருதுகின்றனர். செப்டம்பர் மாதத்தில் அரிசி ஏற்றுமதி 695 மில்லியன் டாலராக இருந்தது. சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் அரிசி ஏற்றுமதி 565 மில்லியன் டாலராக இருந்தது. சென்ற வருடம் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் அரிசி ஏற்றுமதி 85 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிகிறது.

ஆப்பிள் ஐபோனுக்கு நிகராக உயர்ந்த அரிசி ஏற்றுமதி!

இந்த வகையில் அரிசியை ஏற்றுமதி ஆப்பிள் ஐபோனுக்கு நிகராக அக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளது. அதாவது இந்த வருடத்தில் இதுவரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி மாதத்துக்கு ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. அரிசி ஏற்றுமதி அந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் இந்திய அரிசி வகைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் பாஸ்மதி உள்ளிட்ட பல்வேறு வகையான அரிசிகளின் ஏற்றுமதி கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com