நிதிப் பகிர்வு, 4 மாநிலங்கள்
நிதிப் பகிர்வு, 4 மாநிலங்கள்ட்விட்டர், freepik

வரிப் பங்கீடு செய்வதில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சமா? - வெடிக்கும் சர்ச்சை..போராட்டங்கள் அறிவிப்பு!

வரிப் பங்கீடு செய்வதில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது என்கிற குற்றச்சாட்டை தாண்டி இது முன்னிலை பெற்றுள்ளது.
Published on

நிதிப் பங்கீடு: குற்றஞ்சாட்டும் தென் மாநிலங்கள்!

தென்மாநிலங்களுக்கு மத்திய அரசு முற்றிலும் அநீதி இழைத்து வருகிறது என்பதுதான் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் ஒரேகுரலாக இருக்கிறது. நிதி ஒதுக்கீட்டில் பாரம்பட்சம் காட்டுப்படுவதுதான் அதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதேபோல் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த திடீர் பேய்மழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளப் பாதிப்பு நிவாரணம் மற்றும் சேதங்களைச் சரிசெய்ய மத்திய அரசிடம் சுமார் 37,000 கோடி ரூபாய் வழங்கும்படி தமிழக அரசு கேட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இதனால், இன்றுவரை மக்களவையில் இதுதொடர்பான காரசார விவாதம் தொடர்ந்ததில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு குறைவாகத்தான் மத்திய அரசு நிதி ஒதுக்கிவருவதாகக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தமிழ்நாடு ஜிஎஸ்டி வரித் தொகையாக ரூ.1 கொடுத்தால் மத்திய பாஜக அரசு திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசாதான் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பாஜக தலைமையிலான உ.பியில் ஜிஎஸ்டி தொகையாக 1 ரூபாய் கொடுத்தால் 2.73 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறது எனச் சொல்லப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டில் இருந்து 6.23 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி வருவாயை மத்திய அரசு வசூலித்துள்ளதாகவும், ஆனால் 4.75 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி, தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களும் இதே குரலை உயர்த்திப் பிடித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது கர்நாடகாவும் இணைந்துள்ளது.

நிதிப் பகிர்வு, 4 மாநிலங்கள்
”தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி எப்போது தருவீர்கள்?”- மக்களவையில் கேள்வி எழுப்பிய திமுக எம்பிக்கள்!

பாஜக ஆளும் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடா?

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்குப் பிறகு, இந்தக் குரல்கள் இன்னும் வேகம் பிடித்துள்ளன. இந்தப் பட்ஜெட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மொத்தமே வெறும் ரூ. 2 லட்சம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பாஜக ஆட்சி செய்யாத எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு மத்திய அரசு குறைவான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இடைக்கால பட்ஜெட் 2024 - 25 |  நிர்மலா சீதாராமன்
இடைக்கால பட்ஜெட் 2024 - 25 | நிர்மலா சீதாராமன்

மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதுதான் அவர்களுடைய குமுறலாக இருக்கிறது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசும், தெலங்கானா மற்றும் கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசும், கேரளாவில் இடதுசாரியும் ஆட்சியில் உள்ளன. இவையனைத்தும் பாஜகவைச் சார்ந்து இல்லாத ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் ஆகும். அதுபோல் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. எனினும் இதுவும் நிதிப் பிரச்னையில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆனாலும், இந்த விஷயத்தில் தென் மாநிலங்கள்தான் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன், மத்திய அரசுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன.

இதையும் படிக்க: ”ஏன் சின்ன விஷயத்தை இவ்வளவு பெரிதாக்குறீங்க?”- நாய் பிஸ்கட் வீடியோ குறித்து ராகுல் காந்தி விளக்கம்!

கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பிய விவகாரம்

அந்த வகையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் தங்களுடைய வரி வருவாயில் இருந்து மிகக் குறைவான நிதியே தங்களுக்குப் பகிரப்படுவதாக குற்றம்சாட்டிவருகின்றன. மேலும், இதற்குக் கடுமையான எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. குறிப்பாக, இந்தியாவின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதுகுறித்து கருத்துத் தெரிவித்த பெங்களூரு ரூரல் தொகுதியின் காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினரும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் தம்பியுமான டி.கே.சுரேஷ், ’தென் மாநிலங்கள் இதுபோல புறக்கணிக்கப்பட்டால் தனிநாடு கோரிக்கையை எழுப்ப வேண்டியிருக்கும்’ என்று கூறியிருந்தது கர்நாடக மாநிலத்தில் மிகப் பெரிய அரசியல் புயலை எழுப்பியது.

சித்தராமையா
சித்தராமையாTwitter

நிதிப் பகிர்வில் கர்நாடக மாநிலம் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி பிப்ரவரி 7ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா அறிவித்துள்ளார். இதேபோல, மாநில நிதி உரிமையை வலியுறுத்தி, பிப்ரவரி 8ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்களும், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுகவும் இதுபோன்ற போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒத்த கருத்துள்ள தலைவர்கள் ஆட்சியில் இருப்பதால், இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிராக விரைவில் தென் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் உச்சகட்டமாக தென் மாநிலங்களின் பொருளாதார கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முயல்வதாக கர்நாடகா கூற ஆரம்பித்திருப்பதுதான் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

”பாரபட்சம் இல்லை” - மத்திய நிதித்துறை செயலாளர் சோமநாதன் விளக்கம்

”வரிப் பங்கீடு செய்வதில் எந்த பாரபட்சம் இல்லை” என மத்திய நிதித்துறை செயலாளர் சோமநாதன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக முறையில் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், “இதில் 2 அம்சங்கள் உள்ளன. ஒன்று, ஒரு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய வருமானத்தில் எந்தப் பங்கு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும். தற்போதைய நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி 41%. அந்த சதவீதத்தின்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதையும் அந்த நிதி ஆணையம் பரிந்துரை செய்வது வழக்கம். அந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று, அதனடிப்படையில் மாதாமாதம் வரிப் பங்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பங்கீடு இவ்வாறு அல்லது அவ்வாறு இருக்கலாம் என ஒரு வாதத்தை வைக்கலாம். அதை, நிதி ஆணையத்தின் முன்பு வைப்பது அனைத்து மாநிலங்களின் உரிமை. அது 41% இருக்கக்கூடாது. அதைவிட அதிகமாக அல்லது குறைவாக இருக்க வேண்டும் என்பது இன்னொரு வாதம். மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிகமாக கொடுக்க வேண்டுமா என்பதும் இன்னொரு வாதமாக வைக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் அளிக்கப்பட்ட அந்தப் பரிந்துரைக்கேற்ப மாதாமாதம் ஒருமாதம்கூட விடாமல், எந்தவித பாகுபாடும் இல்லாமல், பாரபட்சமும் இன்றி அந்த நிதிப் பகிர்மானம் செய்துகொண்டுதான் இருக்கிறது. எந்த மாநிலத்திற்கும் குறைவாகவோ, கூடுதலாகவோ கொடுத்தது இல்லை. கொடுப்பதும் இல்லை; கொடுக்கவும் மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், “இன்னொன்று, மத்திய அரசின் சில திட்டங்கள் உள்ளன. அதன்படி, 60:40 என்ற பகிர்மானத்தில் 60% செலவை மத்திய அரசும், 40% செலவை மாநில அரசும் செய்வதாக சில திட்டங்கள் உள்ளன. அந்த திட்டங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் என்ன அளவு ஒதுக்க வேண்டும் என்பது அந்தத் திட்டத்தின் தன்மையைப் பொறுத்தது ஆகும். ஆயில் பாம் என்ற திட்டம் ஒருசில மாநிலங்களுக்குப் பொருந்தும். சில மாநிலங்களுக்குப் பொருந்தாது. சில திட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துபவையாக உள்ளன. அந்த திட்டங்களைப் பொறுத்தவரை நிதியமைச்சகம், நிர்வகிக்கக்கூடிய திட்டங்கள் அல்ல. அதற்கென தனித்தனி அமைச்சகங்கள் உள்ளன. அந்த திட்டங்களில் என்ன அளவு போய்ச் சேருகிறது, சேரவில்லை என்பதை அந்த அமைச்சகங்கள்தான் பார்த்துக் கொள்கின்றன. ஆகையால், இந்த நிதிப் பகிர்மானத்தில் எந்தவித சார்பும் இல்லாத ஒரு கோட்பாட்டைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பை பதிவு செய்யலைனா சிறை”- உத்தரகாண்ட் அரசின் பொது சிவில் சட்ட மசோதா சொல்வதென்ன?

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com