ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது
கொரோனா பேரிடர் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் நாடெங்கும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில் மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகைகளும் நிறுத்தப்பட்டன. தற்போது ரயில் சேவைகள் ஏறக்குறைய பழைய நிலைக்கு திரும்பி விட்ட நிலையில் தங்களுக்கான கட்டண சலுகைகள் மட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை என மூத்த குடிமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். முதியவர்களுக்கு ரயில் பயணமே வசதியாக இருக்கும் நிலையில் கட்டண சலுகை அவசியமாகிறது என மூத்த குடிமக்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ரயில்வே துறைக்கு கோரிக்கை கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அச்சகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகையை வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்களில் ஆண்களுக்கு 40 சதவிகிதமும் பெண்களுக்கு 50 சதவிகிதமும் பயணக் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.