‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிரானப் போராட்டங்களுக்கு தனியார் பயிற்சி நிறுவனங்கள் நடத்தி வருபவர்களும், இடைத்தரகர்களுமே காரணம் என்று பணி ஓய்வுப் பெற்ற கர்னல் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் காளியப்பன் முன்னிலை வகித்தார். பின்னர் மறைந்த முன்னாள் படைவீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற கர்ணல் குணசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
அதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்கத் தலைவர் கர்னல் பழனியப்பன் (ஓய்வு) செய்தியாளர்களிடம் பேசினார். “அப்போது ‘அக்னிபத்’ இளைஞர்களுக்கான சிறந்த திட்டம். இளம் வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதால் இளைஞர்கள் ஒழுக்கத்தையும், நல்ல வருமானத்தையும் பெற முடியும். 4 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறும்போது அதன்மூலம் கிடைக்கக் கூடிய பணப்பலன்கள் சுய தொழில் துவங்க பேருதவியாக இருக்கும்.
இந்தத்திட்டம் மூலம் 100 சதவிகிதம் மறுவேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதை சிலர் சரியாக புரிந்து கொள்ளாமல் ஒரே சில மாநிலங்களில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. இதற்கு காரணம் தனியார் சார்பில் பயிற்சி நிறுவனங்கள் நடத்தி வருபவர்களும், இடைத்தரகர்களுமே காரணம். இது ஒரு விருப்பப் பணி தேர்வு. இதில் யாரையும் சேர கூறி கட்டாயப்படுத்தவில்லை.
இதை மக்களுக்கு சில அரசியல் கட்சிகள் தவறாக எடுத்துரைத்து கலவரத்தை உண்டாக்குகின்றன. ‘அக்னிபத்’ குறித்து நன்றாக ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.