மணிப்பூர் மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதால் ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தவுபால் மாவட்டத்தில் லிவாங் பகுதி மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. லிலாங் சிங்ஜயோ பகுதிக்கு வந்த கும்பல், அங்கிருந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியது. ஆனால் அவர்களுக்கு பணம் கொடுக்க பொதுமக்கள் மறுத்ததால், அந்த கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியது.
ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், தாக்குதல் நடத்தியவர்கள் வந்த, 4 மாருதி ஜிப்ஸி ரக வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இதுகுறித்து உள்ளூர்வாசிகள், 4 வெவ்வேறு ஜிப்சிக்களில் கும்பல் வந்ததாகவும் 20 முதல் 25 பேர் இருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். உள்ளூர்வாசி ஒருவரது வீட்டிற்குள் சென்ற அவர்கள் பணம் கேட்கத்தொடங்கினர். அக்குடும்பத்தினர் எச்சரிக்கைவிடுத்ததை அடுத்து மக்கள் அப்பகுதியில் திரண்டனர். அப்போது கும்பல் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது என தெரிவிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து தவுபால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங், பிஷ்னுபூர் ஆகிய மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தௌபால் மாவட்ட ஆட்சியர் ஏ சுபாஷ் பிறப்பித்த உத்தரவில், ஊரடங்கு தளர்வு உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தௌபால் மாவட்டத்தின் முழு வருவாய் அதிகார வரம்பிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அந்தந்த குடியிருப்புகளுக்கு வெளியே நபர்கள் நடமாடுவது தடைசெய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வீடியோ வெளியிட்டுள்ள முதலமைச்சர் பைரன் சிங், பொதுமக்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் விரைவில் கைது செய்வார்கள் என்றும் உறுதி அளித்துள்ளார்.
மணிப்பூர் காவல்துறையும் தனது எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது, “தௌபால் மற்றும் இம்பால் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. NH-37 மற்றும் NH-2 வழியாக முறையே 224 மற்றும் 97 வாகனங்கள் அத்தியாவசியப் பொருட்களுடன் நகர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து பாதிக்கப்படக்கூடிய இடங்களிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.