இந்தியாவில் வசிக்கும் ரோஹிங்யா இஸ்லாமியரை மியான்மருக்குத் திருப்பியனுப்பும் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த இருவர் இந்த வழக்கைத் தொடர்ந்தனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், இதனை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து வரும் திங்கள்கிழமை வழக்கை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது. அரசின் புள்ளி விவரங்களின்படி, பதிவு செய்துகொண்ட சுமார் 14 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கிறார்கள். இவர்கள் தவிர ஆவணங்கள் இன்றி சுமார் 40 ஆயிரம் பேர் இருக்கலாம் என அரசு மதிப்பிட்டிருக்கிறது. சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்றும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்து. இதனைத் தொடர்ந்து ரோஹிங்யா இனத்தவரைத் திருப்பி அனுப்பும் முடிவை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.