இந்தியாவில் அரசு வங்கிகளுக்கு நிகராக தனியார் வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக கோட்டக் மஹிந்திரா வங்கியும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோட்டக் மஹிந்திரா வங்கியின் சில சேவைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி, இன்று தடை விதித்துள்ளது. அதன்படி, கோட்டக் மஹிந்திரா வங்கியின் இணையதளம் மற்றும் மொபைல் பேங்கிங் வாயிலாக புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் தடை விதித்து, அந்தச் சேவைகளை உடனடியாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
எனினும், பிற சேவைகள் தடையின்றி தொடர்ந்து செயல்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் இணையச் சேவை பாதுகாப்பு குறித்து நடத்திய ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் விதிகளை கடைப்பிடிக்க தவறியதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வங்கி வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் சேவையில் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்றாலும், ரிசர்வ் வங்கியின் இந்த தடை உத்தரவு, கோட்டக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி விதிமுறைகளை மீறி செயல்பட்டது தொடர்பாக, அவ்வங்கிக்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.