மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நிதி விவகாரத்தில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் இடையிலான மோதல் வலுத்து வந்தது. இதனால் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமாக செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதுதான் மோதலுக்கு காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில் வீரப்ப மொய்லி தலைமையில் நிதித்துறைக்காக உருவாக்கப் பட்ட 31 பேர் அடங்கிய நிலைக்குழுவில் நேற்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ஆஜரானார்.
அப்போது பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் வங்கிகளை பாதித்துள்ள வாராக்கடன் பிரச்சினை போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் விளக்கங்களை அளித்தார். மேலும் இந்தியாவின் பொருளாதாரம் குறித்தும் பேசினார். அதில் மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு உர்ஜித் படேல் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் தற்காலிகமானது தான் எனவும் விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர்,நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் எனவும் பெட்ரோல் டீசல் விலை குறைந்து வருவதால் பொருளாதாரம் மேலும் வலுவடையும் எனவும் கூறினார்.
இதனையடுத்து ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி முறையில் மத்திய அரசு தலையீடு கூடாது, நிதிக் கொள்கை என்பது ரிசர்வ் வங்கிக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும் உர்ஜித் படேல் பதில் அளிக்காமல் தவிர்த்த கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதில் அளிக்க நாடாளுமன்ற நிலைக்குழு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.