'முறையாக கடைபிடிக்கப்படாத இடஒதுக்கீடு' - ஐ.ஐ.எம். நிறுவனங்களில் நிலை!

'முறையாக கடைபிடிக்கப்படாத இடஒதுக்கீடு' - ஐ.ஐ.எம். நிறுவனங்களில் நிலை!
'முறையாக கடைபிடிக்கப்படாத இடஒதுக்கீடு' - ஐ.ஐ.எம். நிறுவனங்களில் நிலை!
Published on

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பெரும்பாலான நிறுவனங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவான ஆசிரியர்களே இடஒதுக்கீட்டின் கீழ் பணியமர்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டின் கீழ் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை, பெங்களூரு ஐஐஎம் நிறுவன பி.எச்.டி. பட்டதாரி ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார். 2020ஆம் ஆண்டு தகவல்படி 16 ஐஐஎம்-களில் ஆசிரியர் இடஒதுக்கீடு தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

அவற்றில் கொல்கத்தா ஐஐஎம் நிறுவனத்தில் உள்ள மொத்த ஆசிரியர்களில் 3 சதவீதம் பேர் ஓபிசி இடஒதுக்கீட்டின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பெங்களுருவில் எஸ்சி பிரிவில் 3 சதவீதம், எஸ்.டி பிரிவில் 1 சதவீதம், ஓபிசி பிரிவில் 2 சதவீதம் என 6 சதவீதம் ஆசிரியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 94 சதவீத பொதுப் பிரிவினருக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளது. லக்னோவில் 3 சதவீதமும், கோழிக்கோடில் 10 சதவீதமும் ஆசிரியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு சற்றே அதிக அளவில் கடைபிடிக்கப்படுகிறது. ஷில்லாங்-கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவிலிருந்து 31 சதவீதம் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ராய்ப்பூரில் 21 சதவீதமும், ஜம்முவில் 23 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆசிரியர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள திருச்சி ஐஐஎம்-மில் எஸ்சி, எஸ்டி பிரிவில் ஒரு ஆசிரியர் கூட பணியமர்த்தப்படவில்லை. ஓபிசி பிரிவில் 16 சதவீத ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. நாக்பூர் ஐஐஎம்- நிறுவனத்தில் ஒரு சதவீதம் கூட இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. 100 சதவீத ஆசிரியர்களும் பொதுப்பிரிவு மூலமாகவே இணைந்துள்ளனர். பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஐஐஎம் நிறுவனத்தில் ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை அளித்தாலும், அவர்களில் பெரும்பாலானோர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவது இல்லை என்றும், அப்படியே அழைக்கப்பட்டாலும் அவர்களை பணிக்கு தேர்வு செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி நாட்டில் உள்ள 20 ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எஸ்சி பிரிவில் 21 பேரும், எஸ்டி பிரிவில் 5 பேரும், ஓபிசி பிரிவில் 36 பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தின் படி கொடுக்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீட்டு உரிமை மறுக்கப்படுவதை சமூக நீதிக்கு எதிரான போக்கு என விமர்சிக்கின்றனர் செயற்பாட்டாளர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com