ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள பாபா பைத்யநாத் கோயிலுக்கு அருகில் உள்ள திரிகுட் மலையில் இரண்டு ரோப் கார்கள் நேற்று முன்தினம் மோதியது. அந்த விபத்தில் நேற்று முன்தினம் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு பெண் நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில், விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கிட்டத்தட்ட 15 கேபின்கள் அங்கங்கே நின்றது. இதனையடுத்து மீட்பு பணிகளில் இந்தோ திபெத் பாதுகாப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் இந்திய ராணுவத்தின் Mi17 ராக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செங்குத்தான மலை பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்பத்தில் சிரமம் நீடிப்பதால் இப்போதுவரை 38 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 10 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் நீண்ட நேரமாக ரோப் காரின் கேபின்களில் சிக்கியுள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்றும் விரைந்து மீட்புகளை மேற்கொண்டு வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடுத்துரைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதால் இரவு முழுவதும் பாதுகாப்பு பணிகளை மட்டும் அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று காலை முதல் மீண்டும் மீட்பு பணிகள் துவங்கி உள்ளது. விபத்தின் போது சிக்கிய 48 பேரில் 38 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 10 பேரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.