முறைகேடான முறையில் பார்வையாளர்களுக்கு பணம் கொடுத்து தங்களது டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்டை அதிகரிக்க முயன்றதாக ரிபப்ளிக் செய்தி நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து TRP-யில் தனியார் செய்தி நிறுவனங்களின் தலையீடு குறித்து வழக்கும் தொடரப்பட்டது. தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த விவகாரம்.
மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, எப்.ஐ.ஆரில் ரிபப்ளிக் நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பதை மும்பை போலீசாரும், மகாராஷ்டிரா அரசு தரப்பு வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மும்பை கமிஷ்னர் பரம் பீர் சிங் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்க ரிபப்ளிக் நிறுவனத்தின் தலைமை ஆசிரியரும், நிறுவனருமான அர்னாப் கோஸ்வாமி முடிவு செய்துள்ளார்.
அந்த பணியை ரிபப்ளிக் நிறுவன சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழுவினரை மேற்கொள்ளுமாறும் அர்னாப் கோஸ்வாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
சுமார் 200 கோடி ரூபாய் கேட்டு இந்த வழக்கை தொடர் ரிபப்ளிக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதில் 100 கோடி ரூபாய் அர்னாப் கோஸ்வாமியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த காரணத்திற்காகவும், 100 கோடி ரூபாய் ரிபப்ளிக் நிறுவனத்தின் பெயரை டேமேஜ் செய்த காரணத்திற்காகவும் கேட்கப்பட உள்ளது.
இதன் மூலம் ரிபப்ளிக் நிறுவனம் எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது ரிபப்ளிக்.
அரசியல் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் இந்தியாவின் நம்பர் 1 ஊடக நிறுவனமான ரிபப்ளிக் எந்தவித தவறையும் செய்யவில்லை என்பது நீதிமன்றத்தின் மூலம் தெரிந்துள்ளது. ரிபப்ளிக் எப்போதும் ஊடக தர்மத்தை காக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.