ஆன்லைனில் ஆயுதத்தோடு ஆசிடும் அமோக விற்பனை! என்றுதான் மேம்படும் இந்தியப் பெண்களின் வாழ்வு?

ஆன்லைனில் ஆயுதத்தோடு ஆசிடும் அமோக விற்பனை! என்றுதான் மேம்படும் இந்தியப் பெண்களின் வாழ்வு?
ஆன்லைனில் ஆயுதத்தோடு ஆசிடும் அமோக விற்பனை! என்றுதான் மேம்படும் இந்தியப் பெண்களின் வாழ்வு?
Published on

கடந்த 2013ஆம் ஆண்டிலேயே ஆசிட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டும், இன்னும் மறைமுகமாக ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி, டெல்லியின் தெற்கு துவாரகா பகுதியில் 17 வயது பள்ளி மாணவி ஒருவர் ஆசிட் வீச்சுக்கு ஆளானார். தலைநகரை உலுக்கிய இந்த சம்பவத்தில், அடுத்த 12 மணி நேரத்தில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சிறுமி பாதிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணமே, ஆன்லைனில் தங்குதடையின்றி நடைபெறும் அமில விற்பனையே எனக் குற்றம்சாட்டப்பட்டது. ஏனெனில் அந்நபர்கள், ஆன்லைன் மூலம் அமிலத்தை வாங்கி அந்தச் சிறுமி வீசியிருந்தனர். இதனையடுத்து டெல்லி மகளிர் ஆணையம், அந்த ஆசிட் விற்பனை செய்த ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட அமில விற்பனையை, காய்கறி போல எளிதாக இந்த நிறுவனங்கள் எப்படி விற்கலாம் என டெல்லி மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பியது. கடந்த 2013ஆம் ஆண்டு, நாட்டில் அமில விற்பனை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும், உரிய உரிமம் பெற்றவர்கள் மட்டும், ஏக நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமிலம் விற்கலாம். அதன்படி அமிலம் வாங்க வருவோர் உரிய காரணத்தை விளக்கியும், அடையாள ஆவணங்களை சமர்பித்தும் மட்டுமே அமிலம் வாங்க முடியும்.

ஆனால் இந்த கட்டுப்பாடுகளுக்கு மாறாக, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் எளிதில் அமிலத்தை விற்பனை செய்திருக்கின்றன. எனவே காவல்துறை மற்றும் மகளிர் ஆணையம் உள்ளிட்ட விசாரணைகளுக்கு அவை தற்போது ஆளாகி இருக்கின்றன. அதுமட்டுமின்றி, டெல்லி மகளிர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்க்குப் பிறகு, அதாவது ஒரு வார காலத்தில் மீண்டும் ஆன்லைன் மூலம் ஆசிட் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, “வணிக தளங்களிலேயே ஆசிட் கிடைக்கிறது. ஆனால், அந்தச் சிறுவர்கள் இங்கு வாங்காமல் ஆன்லைனில் வாங்கியுள்ளனர். காரணம், ஆன்லைனில் வாங்குவது எளிதான விஷயம். எந்த விவரங்களையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இதனாலே இந்தக் குற்றம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆன்லைனில் ஆசிட் விற்பனை மட்டுமின்றி, ஆயுதங்களின் விற்பனையும் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள், “21 வயதுக்கு மேற்பட்டவர்களே ஆயுதங்களைப் பெற முடியும் என்று சட்டம் கூறுகிறது. மேலும் ஆயுதம் வாங்குபவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் நீதிமன்றத் தண்டனைகள் எதுவும் பெற்றிருக்கக் கூடாது; நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவற்றையெல்லாம் பெற்றபிறகே ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், சமீபகாலமாக ஆன்லைனில் ரூ.389 விலை முதல் ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

கடந்த 2021ஆம் ஆண்டில் ஒரு ஆன்லைன் நிறுவனம் 71 ஆயுதங்களை விற்பனை செய்திருக்கிறது என தரவுகள் சொல்கின்றன. ஆனால் இவற்றை விற்பதற்கான விதிமுறைகளை எந்த ஆன்லைன் நிறுவனங்களும் கடைப்பிடிப்பதில்லை. வாங்குபவர்களும் கடைப்பிடிப்பதில்லை.

ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டால் போதும், எல்லாம் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. இதன்மூலம் என்ன பாதுகாப்பு கிடைக்கிறது? நுகர்வோர் எதற்காக, இந்த ஆயுதத்தை வாங்க விரும்புகிறார், அவருடைய முழு விவரம் என்ன என்பதை ஆன்லைன் நிறுவனங்கள் பெற்றால்தானே வாங்குபவர்களுக்கும் பயம் வரும். ஆனால், அவர்கள் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கருதுகின்றனர். இதனாலேயே இதுபோன்ற குற்றங்கள் பெருகுகின்றன.

தடையை மீறியும் ஆசிட் விற்பனை செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஆனால், அவற்றைப் பற்றியெல்லாம் ஆன்லைன் நிறுவனங்கள் கவலைப்படுவதில்லை. ஆகையால், வரும் காலங்களில் ஆன்லைனில் இதுபோன்று விற்கப்படும் பொருள்களுக்கு கடுமையான சட்டங்கள் வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்” என்கின்றனர்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, நேற்றைய தினம் கூட ஒடிசா மாநிலத்தில் காதல் திருமணம் செய்த சில நாட்களிலேயே மனைவி மீது கணவன் ஆசிட் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற குற்றங்கள் குறைய, ஆன்லைன் நிறுவனங்கள் மீது அரசு என்ன மாதிரியான நடவடிக்கையை எப்போது எடுக்கப்போகிறது என்பதே அனைவரின் தற்போதைய கேள்வியாக உள்ளது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com