சாமாஜ்வாதி ஆட்சியில் ராம பக்தர்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது ஆனால் பாஜக ஆட்சியில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டது அதை நினைவில் வைத்து வாக்களியுங்கள் என உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.
உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீவிரமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார். இன்று ஹஸ்தினாபூர், ஹாபூர் உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய யோகி...
கடந்த 2003 முதல் 2017 வரை சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உத்தரபிரதேச மாநிலத்தை ஆட்சி செய்தது அவர்களின் ஆட்சியை விட பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் வீடு இல்லாதோருக்கு 43 லட்சம் இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
சமீபத்தில் சமாஜ்வாதி கட்சியின் நெருங்கிய நண்பர் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்க நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அவை அனைத்தும் மக்களுடைய பணம். மிக முக்கியமாக சமாஜ்வாதி ஆட்சியின்போது ராம பக்தர்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. சிவ பக்த கன்வாரியாக்களின் புனிதப் பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு வந்ததும் ராமர் கோவில் கட்டும் கனவை நனவாக்கியது.
மேலும் மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய வகையில் டெல்லி - மீரட் இடையிலான 4 மணிநேர பயணத்தை 40 நிமிடங்களாக குறைக்கும் வகையில் விரைவுச் சாலைகள் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் அமைக்கப்பட்டது என்பதை மக்கள் நினைவில் வைத்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.