திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியினர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் தங்களது திருமண வாழ்க்கையில் மனைவியின் பெற்றோர் மற்றும் காவல்துறையினர் தலையிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்குமாறு மனுவில் குறிப்பிடிருந்தனர்.
தம்பதியினரின் ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், அவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இந்த தம்பதியினருக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக மணமகன் பின்பற்றும் மதத்திற்கு மணப்பெண் மாறியுள்ளதாக குறிப்பிட்ட நீதிமன்றம், மதமாற்றம் திருமண நோக்கத்திற்காக மட்டும் செய்யப்பட்டது தெரிய வருவதாக கூறியது.
மேலும் 2014-ல் நூர் ஜஹான் பேகம் வழக்கை குறிப்பிட்டு பேசிய நீதிபதிகள், வெறும் திருமண நோக்கத்திற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை எடுத்துரைத்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.