தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
தேசிய குற்ற பதிவுகள் முகமை வெளியிட்ட தகவலில், கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 3 லட்சத்து 59 ஆயிரத்து 849 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. கொலை, பாலியல் வன்கொடுமை, வரதட்சணை மரணம், தற்கொலைக்கு தூண்டுவது, அமில வீச்சு, கடத்தல் உள்பட கடந்த 2015ஆம் ஆண்டில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 243 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டில் இந்த வழக்குகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 ஆக இருந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சுமார் 20 ஆயிரத்துக்கு அதிகமான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக குற்ற பதிவுகள் முகமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதில் அதிகப்பட்சமாக கடந்த 2017-ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் 56 ஆயிரத்து 11 வழக்குகள் பதிவாகியுள்ளன. 31 ஆயிரத்து 979 வழக்குகளுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், 30 ஆயிரத்து 992 வழக்குகளுடன் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதே சமயம் மூன்றாவது ஆண்டாக டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.