மகாராஷ்ட்ரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் குஜராத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு அவர்கள் அசாமுக்கு சென்றனர்.
மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், அண்மையில் அங்கு நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் 10 இடங்களில் 5 இடங்களை பாஜக கைப்பற்றியது. 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் பலம் இருந்த சூழலில், சுயேச்சைகள், பிற கட்சி எம்எல்ஏக்கள் என சுமார் 23 பேர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் அக்கட்சி 5-வது இடத்திலும் வெற்றி பெற்றது. இதில் 12-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆளும் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து சிவசேனா மீள்வதற்குள்ளாகவே, அக்கட்சியைச் சேர்ந்த 30 எம்எல்ஏக்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன் நேற்று திடீரென மாயமாகினர். அவர்கள் பாஜக ஆளும் குஜராத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை தொடர்புகொள்ள சிவசேனா கட்சியினர் எவ்வளவு முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை.
இந்நிலையில், அந்த எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று இரவு விமானம் மூலம் அசாமின் குவாஹாட்டி நகருக்கு சென்றனர். அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குவாஹாட்டியில் செய்தியாளர்களை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே, "30 எம்எல்ஏக்கள் மட்டுமல்ல; 44 எம்எல்ஏக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். இது தவிர 7 சுயேச்சை எம்எல்ஏக்களும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எங்கள் கோரிக்கையை மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் தெரிவித்து விட்டேன். இனி முடிவெடுப்பது அவரது கையில்தான் உள்ளது" என்றார். பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி நடத்த வேண்டும் என்பதே இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் விடுக்கும் கோரிக்கையாக உள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சிவசேனா ஒத்துழைக்காவிட்டால், ஆட்சியை கவிழ்க்கும் முடிவில் அவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்ட்ராவில் ஆளும் சிவசேனாவுக்கு 55, தேசியவாத காங்கிரஸுக்கு 53, காங்கிரஸுக்கு 44 உறுப்பினர்கள் என்ற வீதம் அக்கூட்டணிக்கு மொத்தம் 152 எம்எல்ஏக்கள் உள்ளனர். 288 உறுப்பினர்களை கொண்ட மாநில சட்டப்பேரவையில் 144 உறுப்பினர்களை கொண்டிருக்கும் கட்சியே ஆட்சியமைக்கும் தகுதியை பெறும். தற்போது எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும், சிறிய கட்சிகள், சுயேச்சைகள் என 119 எம்எல்ஏக்கள் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இந்த சமயத்தில், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 30 எம்எல்ஏக்கள் பாஜவுக்கு ஆதரவளித்தால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அரசு கவிழும் நிலை ஏற்படும். அதன் பின்னர் பாஜக பெரும்பான்மை பலத்துடன் அங்கு ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.