கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. இதனிடையே அதி ருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து தங்களது பதவி விலகும் முடிவை தெரிவிக்க வேண்டும் என நேற்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அந்தச் சந்திப்பின் போது எம்எல்ஏக்கள் பதவி விலகல் குறித்து சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
இதையடுத்து மும்பையிலிருந்து சிறப்பு விமானத்தில் பெங்களூரு வந்த எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை மீண்டும் அளித்தனர். இதற்கிடையில் ராஜினாமா விவகாரத்தில் முடிவெடுக்குமாறு நீதிபதிகள் அளித்த அறிவுறுத்தலுக்கு எதிராக, சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனு மீதான விசாரணை, இன்று வந்தது.
அப்போது, கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றும் அரசிய ல் சாசன விவகாரம் என்பதால், விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என் றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.