2019-20 ஆம் ஆண்டில் கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் குறித்த காங்கிரஸின் பங்களிப்பு அறிக்கை இந்த வார தொடக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் பதிவேற்றப்பட்டது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள், ஒரு சுவாரஸ்ய குறிப்பைத் தருகிறது. அதன்படி, 352 பங்களிப்பாளர்கள் கட்சிக்கு நன்கொடையாக நிதி கொடுத்துள்ளனர். இதில், என்ன சுவாரஸ்யம் என்கிறீர்களா..?
அரசியல் கட்சிகள் ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் ஆணையத்தில் தனிநபர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட நன்கொடைகளை பட்டியலிட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் இந்த முறையும் பட்டியலை காங்கிரஸ் தாக்கல் செய்துள்ளது.
அதன்படி, கட்சிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரூ.50,000 பங்களிப்பையும், அவரது மகனும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி கட்சி நிதிக்கு ரூ.54,000 நன்கொடையும் அளித்துள்ளனர். அதேநேரத்தில், காங்கிரஸின் 'கிளர்ச்சிக் குழு', ஜி-23 என அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்களில் ஐந்து பேர், சோனியா குடும்பத்தைவிட கட்சிக்கு அதிக நிதி கொடுத்துள்ளனர்.
காங்கிரஸின் தலைமைப் பிரச்னையை சரிசெய்வது குறித்து ஜி-23 தலைவர்களிடையே அதிகம் குரல் கொடுத்த கபில் சிபல், கட்சி நிதிக்கு ரூ.3 கோடியை நன்கொடையாக கொடுத்துள்ளார். கபில் சிபல்தான் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் கட்சிக்கு நிதிக் கொடுத்த மிகப்பெரிய தனிப்பட்ட பங்களிப்பாளராக இருக்கிறார்.
இவரைப்போல் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சஷி தரூர், மிலிந்த் தியோரா மற்றும் ராஜ் பப்பர் போன்ற அதிருப்தி தலைவர்களும் ராகுல், சோனியாவை விட அதிக நிதி கொடுத்துள்ளனர். கட்சி நிதிக்கு ராஜ் பப்பர் ரூ.1.88 லட்சமும், மிலிந்த் தியோரா ரூ.1 லட்சமும், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சஷி தரூர் ஆகியோர் தலா ரூ.54,000 நன்கொடையும் வழங்கி இருக்கின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, மறைந்த மோதிலால் வோரா, மறைந்த அகமது படேல், முன்னாள் மத்திய மந்திரி பிரீனீத் கவுர் மற்றும் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் கட்சிக்கு ரூ.54,000 நிதி கொடுத்து இருக்கின்றனர்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு அதிகார இழப்பை ஏற்படுத்தி காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஜோதிராதித்யா சிந்தியாவும் கட்சி நிதிக்கு ரூ.54,000 பங்களிப்பை வழங்கினார் என்று அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நன்கொடை பட்டியலில் காங்கிரஸ் 2019-20 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.139 கோடி நன்கொடை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே 2018-19-ல் காங்கிரஸுக்கு ரூ.146 கோடி நன்கொடை கிடைத்திருந்தது நினைவுகூரத்தக்கது.
- மலையரசு
தகவல் உறுதுணை: India Today