இங்கிலாந்தில் கைது செய்யபப்ட்ட விஜய் மல்லையா மூன்றே மணி நேரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது எப்படி என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்ற விஜய் மல்லையா அதைத் திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் இங்கிலாந்துக்குத் தப்பிய அவரைக் கைதுசெய்து அழைத்துவரும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது இந்திய அரசு. இதனிடையே, கடந்த 13-ம் தேதி விஜய் மல்லையாவுக்கு, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்தது. அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக, விஜய் மல்லையா மீது இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், விஜய் மல்லையாவைக் கைதுசெய்வது தொடர்பாக இங்கிலாந்திடம் உதவி கோரியிருந்தது இந்திய அரசு. வேண்டுகோளை ஏற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீஸார், அவரை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மான்செஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மூன்றே மணி நேரத்தில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆஜர்படுத்தப்பட்ட உடன் அவர் விடுவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
3 மணி நேரத்தில் ஜாமீன் கிடைக்க முக்கிய காரணம், 5 கோடி ரூபாய் மதிப்புடைய பத்திரத்தை பிணையாக நீதி மன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறார். மேலும், அடுத்து நடக்க இருக்கும் விசாரணையின்போது அவரது இந்திய பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் உத்தரவை மல்லையா ஏற்றுக்கொண்டதால்தான் உடனடியாக ஜாமீன் கிடைத்துள்ளது.