நாட்டில் மற்ற மாநில தேர்தல்களை காட்டிலும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தல் மட்டும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதற்கான காரணங்களை இங்கு காண்போம்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 20 கோடி பேர் இருந்தனர். தற்போது அது 24 கோடியாக உயர்ந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 80. சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 403. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை காட்டிலும் அதிக மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்டிருப்பதால் உத்தரப்பிரதேசம் அரசியல் ரீதியாக வலிமையான மாநிலமாக திகழ்கிறது.
ஜவகர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சரண் சிங், ராஜிவ் காந்தி, சந்திரசேகர், விபி சிங் என 7 பிரதமர்களை இந்தியாவுக்கு உத்தரப்பிரதேசம் தந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமர் ஆன வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடியையும் சேர்த்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை 9- ஆக உயரும். உத்தரப்பிரதேசத்தில் அதிக இடங்களை வெல்லும் கட்சியே பெரும்பாலும் மத்தியில் ஆட்சியமைக்கும் நிலை உள்ளதால் அம்மாநிலத்திற்கு அரசியல் கட்சிகள் அதிக முக்கியத்துவம் தருவது இயல்பான ஒன்றாக உள்ளது. இதன் காரணமாகவே மக்களவைத் தேர்தலுக்கு அடுத்தபடியாக நாடெங்கும் அதிகம் கவனிக்கப்படும் தேர்தலாகவும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், தற்போதைய உத்தரப்பிரதேச தேர்தல் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையலாம் என்பதால் இத்தேர்தல் குறித்த பெரும் எதிர்பார்ப்பு நாடெங்கும் எழுந்துள்ளது.