ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஏகல்கோரி. இங்கு வசிக்கும் 75 வயது மனிதர் தான் ரானாராம் பிஷ்னோய். இவரது 75 வருட வாழ்க்கையில், சுமார் 50 வருடங்களை இயற்கைக்காவும், மரங்களுக்காகவும் தியாகம் செய்துள்ளார். இவர் தனது சிறுவயது முதலே மரம் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராய் இருந்துள்ளார். அந்த ஆர்வத்தில் இவர் வீட்டின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த வறட்சிப் பகுதிகளில் சுமார் 27,000 மரங்களை இதுவரை விதைத்துள்ளார்.
இவர் வீட்டிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இவர் மரங்களை நடுகிறார். அந்த மரங்களை வெயிலில் வாடிப்போகாமல், தினமும் அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறது. வயது முதிர்ச்சியால் அவர் தண்ணீர் கொண்டு செல்வதில் இவருக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
சில நேரங்களில் ரானாராம் தனது வீட்டுப்பெண்கள் மற்றும் நண்பர்களை தண்ணீர் கொண்டு வர உதவிக்கு அழைத்துச்செல்கிறார். அத்துடன் ஊர்மக்களும் சில நேரங்களில் ரானாராமிற்கு உதவியாக தண்ணீர் கொண்டு செல்கின்றனர். அவ்வாறு தண்ணீர் கொண்டு வருபவர்களுக்கு ஒரு மரத்திற்கு ரூ.2 என ரானாராம் தனது பணத்தை வழங்குகிறார்.
மரம் வளர்ப்பு தொடர்பாக கூறும் ரானாராம், “மரங்கள் எல்லாம் கடவுள் போன்றவை. அவற்றிற்கு சேவை செய்வதால் நான் மனநிம்மதியும், திருப்தியை அடைகிறேன்” என்கிறார். இவர் வளர்த்துள்ள மரங்களால் வறட்சியான பகுதியில், ஒரு சிறிய காடே உருவாகியுள்ளது. இவரைப் பாராட்டி பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வன ஆர்வலர்கள் பலரும் இவரை கெளரவப்படுத்தி வருகின்றனர்.