பொதுவாக திருமணம் உள்ளிட்ட வீட்டில் எந்தவொரு விஷேசத்திற்கும் உறவினர்களை அழைக்க முதலில் நாம் பயன்படுத்துவது அழைப்பிதழ்களை தான். விதவிதமான வகையில் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டிருந்தாலும் கூட பல நேரங்களில் தேவை முடிந்த பின்பு குப்பைகளாக அதனை கசக்சி வீசுகிறோம். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக சற்று வித்தியாசமான முறையில் திருமண அழைப்பிதழை அச்சடித்திருக்கிறார்.
கேரளாவை சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ அப்துரஹ்மான். இவர் தனது மகளான ரிஷ்வானாவின் திருமணத்திற்கு மிக வித்தியாசமான முறையில் அழைப்பிதழை அச்சடித்திருக்கிறார். தங்க நிறத்தில் அழகான எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டுள்ள திருமண அழைப்பிதழில், மகளின் முக்கியமான நாளில் அனைவரும் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். அத்தோடு மட்டும் அவர் அழைப்பு நிற்கவில்லை. அழைப்பிதழை படித்துவிட்டு அதனை புதைத்து விடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தேவையில்லாத காரணத்திற்காக அவர் இப்படி சொல்லவில்லை.
திருமண அழைப்பிதழை 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலான தாளில்தான் அவர் அச்சடித்திருக்கிறார். அத்தோடு மட்டுமல்லாமல் திருமண அழைப்பிதழை சுற்றிலும் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்பட பல தாவரங்களின் விதைகளை ஒட்டியுள்ளனர். எனவே தான் அழைப்பிதழை படித்த பின்பு புதைத்து விடுங்கள் என கூறியுள்ளார். இதனால் அழைப்பிதழில் ஒட்டுப்பட்டுள்ள விதைகள் நாளடைவில் வளரும். சுற்றுச்சூழல் காக்கப்படும் என்ற நோக்கத்தில்தான் எம்எல்ஏ அப்துரஹ்மான் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
தனது நண்பர் ஒருவர் மூலமாகத்தான் இந்த சிந்தனை தமக்கு தோன்றியதாக தெரிவிக்கும் எம்எல்ஏ, திருமண அழைப்பிதழ்களை யாரும் வீணாக்க மாட்டார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தங்களால் செடிகளை வளர்க்க முடியாவிட்டாலும் கூட அழைப்பிதழ்களை மற்றவர்களுக்கு அவர்கள் வழங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். விதைக்கப்பட்ட விதைகள் செடிகளாக வளர்ந்து தோட்டமாக மாறும்போது மக்கள் தன் மகளின் இனிய திருமணத்தை நினைவுகூர்ந்து கொள்வார்கள் என்றும் எம்எல்ஏ மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Courtesy: TheNewsMinute