ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெருத்த நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் அனில் அம்பானி மற்றும் நான்கு இயக்குநர்கள் அந்நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். கடன் சுமையால் தவிக்கும் இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மணிகண்டனும் ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா முறித்து அவர், “அனில் அம்பானி, திருமதி சாயா விராணி, திருமதி மஞ்சரி காக்கர் ஆகியோர் நவம்பர் 15 அன்றே நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்” எனக் கூறியுள்ளார். ரைனா கரணி மற்றும் சுரேஷ் ரங்கச்சார் ஆகியோர் முறையே நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ராஜினாமா செய்துள்ளனர்.
சட்டரீதியான நிலுவைத் தொகை தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பின்னர், 2019 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டான ஜூலை முதல்-செப்டம்பர் வரையிலான காலவரையறைக்குள் மட்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ.30,142 கோடி நஷ்ட கணக்கு காட்டி உள்ளது. இதுவரையில் இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அதிக இழப்பு தொகைகளில் இது இரண்டாவது இடமாகும்.
ஆனால் ஒரு காலத்தில் உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் அம்பானி இருந்தார். அதே நிறுவனம் இப்போது நிலுவைத் தொகையை வசூலிக்க கூட சொத்துக்களை விற்க முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நொடிந்து வரும் நிலையை அடைந்துள்ள இந்நிறுவனம், ஒரு வருடத்திற்கு முன்னர் மூன்று மாதங்களில் 1,141 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.