புதிய தோற்றத்தில் இருபது ரூபாய் நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு, ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. இதையடுத்து புதிய வடி வமைப்பில், ரூ.500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய், இருநூறு ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. புதிய வண்ணத்தில் ரூ.100, ரூ.50 நோட்டுகளும் வெளியாயின. இந்நிலையில் புதிய வடிவமைப்பில் 20 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கிறது.
இந்த புதிய ரூபாய் நோட்டு பச்சைக் கலந்த மஞ்சள் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. மறுபக்கம் நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் எல்லோரா குகைகளின் தோற்றம் இடம் பெற்றுள்ளது. அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் இருப்பது போல் தமிழ் உள்பட 15 மொழிகளில் 20 ரூபாய் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நோட்டுக்கள் விரைவில் புழக்கத்துக்கு வருகிறது. இது வந்தாலும் பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும்.