பணப்பரிவர்த்தனை தவிர Paytm வங்கியின் செயல்பாடுகள் அனைத்தையும் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பின் முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி விடுத்துள்ள அறிக்கையில் Paytm வங்கியின் செயல்பாடுகள் தொடர்ந்து விதிமுறைகளை மீறி உள்ளதாகவும், தொடர் புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து “பிப்ரவரி 29ம் தேதிக்குப்பின் Paytm பேமண்ட்ஸ் வங்கிக்கு புதிய வைப்பு நிதி பெறவோ, கடன் பரிவர்த்தனை மேற்கொள்ளவோ, வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வரவு செய்யவோ கூடாது.
பிரிபெய்ட் வசதிகள், வாலெட்டுகள், பாஸ்டேக் (Fastag) உள்ளிட்ட சேவைகளை வழங்கவும் Paytm நிறுவனத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும் யுபிஐ பணப்பரிவர்த்தனையை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
வங்கி சார்ந்த விதிமுறைகளை தொடர்ந்து மீறியது தணிக்கையில் தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் வைத்துள்ள பணத்தை இருப்பு உள்ளவரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்” என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. PAYTM நிறவனத்திற்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் இன்று வர்த்தகம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அதன் பங்குகள் 20% கடும் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.