கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 9.5 சதவிகிதமாகக் குறையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் மூன்று நாள் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் மும்பையில் நடைபெற்ற நிலையில், குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும் தற்போதுள்ள 4 சதவிகிதத்திலேயே தொடரும் எனவும் அறிவித்துள்ளது. அதேபோல, ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 3.35 சதவிகிதம் என்ற பழைய நிலையே தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக ரெப்போ விகிதங்களை மாற்றாமல் இருப்பதாகவும் நடப்பு நிதியாண்டின் இறுதி வரை வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மைனஸ் 9.5 சதவிகிதமாக வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.