நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19ஆம் தேதி அறிவித்தது. அதேநேரத்தில், “புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லும் எனவும், வரும் 23ஆம் தேதி (நாளை) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை தினமும் ரூ.20,000 மதிப்பு அளவுக்கு வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, நாடு முழுவதும் 2,000 ரூபாய் பற்றிய பேச்சுகளும், வதந்திகளும் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும்போது வங்கியில் தரப்படும் படிவத்தை நிரப்ப வேண்டும் எனவும் ஆதார் அட்டை போன்ற அடையாளச் சான்று ஒன்றைக் காட்ட வேண்டும் எனவும் தகவல்கள் பரவின. மேலும், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் வேளையில் மீண்டும் பழையபடி 1,000 ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்படும் எனவும் வதந்திகள் பரவின.
இந்த நிலையில், நேற்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டிருந்த அறிவிப்பில், “2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள எந்தவிதமான படிவத்தை நிரப்பவோ, அடையாளச் சான்றைக் காட்டவோ தேவை இல்லை” எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், இன்று (மே 22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், “ஆர்பிஐ 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் வேளையில் மீண்டும் பழையபடி 1,000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வருகிறதா” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “இது முற்றிலும் 'ஊக' அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகள். ரிசர்வ் வங்கிக்கு 1,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டம் தற்போது ஏதுமில்லை” என்றார்.
தொடர்ந்து அவர், “2016ஆம் ஆண்டு இந்தியாவில் வேகமாக நாணயப் புழக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டபோது ஒரே இரவில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி மாயமானது. இந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் 2,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. சந்தையில் போதுமான பிற ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், 2018-19 ஆம் ஆண்டிலேயே 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது” என விளக்கம் அளித்தார்.
மேலும் அவர், “2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை புழக்கத்தில் இருக்கும். அதனால் அந்த நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம். இன்னும் 4 மாதங்கள் அவகாசம் உள்ளது.
தினமும் எத்தனை 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகிறது என்று வங்கிகள் ரிசர்வ் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். பண நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவே 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறப்படுகிறது.
2000 ரூபாய் திரும்பப் பெறுவதால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு மிக மிகச் சிறியது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் நோட்டுகளை மாற்றவும் போதிய ஏற்பாடுகள் செய்யப்படும். 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளோம்” என்றார்.