செல்போன் வாயிலாக பணப் பரிவர்த்தனைக் கொண்டிருக்கும் செயலிகளில் பேடிஎம் (paytm) ஒன்று. இந்தச் செயலி மூலம் விரைவாகப் பணம் அனுப்பப்படுவதுடன், ஷாப்பிங், இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றுக்கும் கட்டணத்தை விரைவாகச் செலுத்த முடியும். இந்த நிலையில், யுபிஐ (Unified Payments Interface) மற்றும் வங்கிச் சேவைகள் வழங்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு (paytm payment bank) பிப்ரவரி 29 முதல் புதிய வைப்பு நிதி பெறவோ, கடன் பரிவர்த்தனை மேற்கொள்ளவோ இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
2022ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை இணைக்க முன்னர் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பேடிஎம், வங்கி சார்ந்த விதிமுறைகளைப் பின்பற்றாதது தணிக்கையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
புதிதாக வைப்புநிதி பெறவோ, கடன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவோ, வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வரவு செய்யவோ கூடாது என்றும் முன்கூட்டிய பிரீபெய்ட் வசதிகள், வாலெட்கள், பாஸ்டேக், போக்குவரத்து அட்டை உள்ளிட்ட சேவைகளை வழங்க பேடிஎம்க்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29 முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளில் வைத்துள்ள தங்கள் பணத்தை இருப்பு உள்ளவரை திரும்பப் பெற்றுக்கொள்ள இயலும் எனவும் ஆர்பிஐ தெளிவுப்படுத்தியுள்ளது.