டிஎன்ஏ தொழில்நுட்ப வரன்முறைச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்வதாகவும், இது பிரிட்டிஷ் கால குற்றப்பரம்பரைச் சட்டம் போன்றது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காவல் துறையால் சந்தேகப்படும் எந்த ஒரு நபரின் மரபணு மாதிரியையும் சேகரித்து தகவல் தொகுப்பில் சேர்க்க மத்திய அரசின் புதிய சட்ட மசோதா வழி செய்வதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ஒருவருடைய மரபணுவை வைத்து அவர் குற்றம் செய்தாரா என முடிவு செய்யும் இந்த வழிமுறை பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த குற்றப்பரம்பரை சட்ட நடைமுறையை போலுள்ளதாக ரவிக்குமார் கூறியுள்ளார்.
இம்மசோதாவை நிறைவேற்ற ஏற்கனவே செய்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் தற்போது இதில் சில திருத்தங்களுடன், அது மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
பெகாசஸ் மென்பொருளை கொண்டு அரசியல் எதிரிகளை உளவு பார்த்ததுபோல் டிஎன்ஏ வரன்முறை சட்டமும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இம்மசோதாவை நிறைவேற விடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்க வேண்டும் என்றும் ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்