மும்பையில் மிகப் பெரிய நிழல் உலக தாதாவாக வலம் வந்தவர் ரவி புஜாரி. மும்பையின் கோடீஸ்வரர்களை டார்கெட் செய்து, அவர்களை மிரட்டி பணம் பறிந்துவந்தார். போலீஸுக்கு தண்ணி காட்டி வந்த அவரை, கடந்த 2019-ம் ஆண்டு செனகல் நாட்டில் வைத்து கைது செய்தது காவல்துறை. பின்னர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
கர்நாடக போலீசார் பல்வேறு வழக்குகள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு வில்லேபார்லேயில் உள்ள கஜாலி ஓட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் ரவி புஜாரியை விசாரிக்க மும்பை போலீசாருக்கு அனுமதி கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அவரை அழைத்து வந்து மும்பை சிறப்பு மோக்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
யார் இந்த ரவி புஜாரி?
மும்பையில் பில்டர்கள் மற்றும் திரைப்படப் பிரபலங்கள், ரெஸ்டாரன்ட் உரிமையாளர்களை மிரட்டிப் பணம் பறித்துவந்தவர் ரவி புஜாரி. மும்பையில் மட்டும் ரவி புஜாரி மீது 80 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதேபோல, கர்நாடகாவில் 100 வழக்குகள் உள்ளன. சோட்டாராஜனின் நெருங்கிய கூட்டாளிதான் இந்த ரவி புஜாரி. கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாகவே இருந்து வந்துள்ளார். சோட்டா ராஜனும் ஏற்கெனவே இந்தியாவுக்கு நாடு கடத்தி வரப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
தொடக்கத்தில் பெங்களூரில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த புஜாரி, பின்னாளில் மும்பைக்கு சென்றார். பின்னர், காவல்துறையின் பார்வை அவர் பக்கம் திரும்பவே, 1996-ம் ஆண்டு அங்கிருந்து தப்பித்து நேபாளம், பாங்காக், உகாண்டா போன்ற பகுதியில் பதுங்கி இருந்தார்.
ரவி புஜாரி மும்பையிலிருந்து சென்ற பிறகு, அந்தோணி பெர்னாண்டஸ் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். பின்னர் டோனி பெர்னாண்டஸ் என்றும், ராக்கி பெர்னாண்டஸ் என்றும் மாற்றிக்கொண்டு, அதற்கு தக்கபடி பாஸ்போர்ட் தயாரித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
அதோடு விடவில்லை, அங்கிருந்துகொண்டே தனது கூட்டாளிகள் மூலம் மும்பையில் முக்கியப் பிரமுகர்களை மிரட்டி, பணம் பறித்து வந்தார். இதனிடையே போலீசாரின் கடும் முயற்சியின் பலனாக கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் செனகல் நாட்டில் பெங்களூரு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டார். மும்பையில் புஜாரி மீதுள்ள வழக்குகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்த மும்பைக்கு அழைத்து வர போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால், பெங்களூரிலுள்ள வழக்குகளின் விசாரணைக்கு ரவி புஜாரி தேவையாக இருந்ததால், எளிதில் மும்பைக்கு அழைத்துவர முடியவில்லை. பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு பெங்களூரு கோர்ட் கடந்த வாரம் ரவி புஜாரியை மும்பை போலீசாரிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து மும்பைக்கு அழைத்துவரப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ரவி புஜாரியை மார்ச் 9-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து ரவி புஜாரியை போலீசார் சிறையில் அடைக்காமல் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்வைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
மும்பை போலீஸாரின் கஸ்டடியில் சில மாதங்கள் ரவி புஜாரி இருப்பார் என்று தெரிகிறது. தற்போது கஜாலி ஓட்டலில் 2016-ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இது தவிர மிகவும் பிரபலமான தீபா பாரில் துப்பாக்கிச்சூடு நடத்தியது, செம்பூர் பில்டர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது போன்ற பல வழக்குகளும் இவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.