கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்து காவல் நிலைய கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ கிராம் கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறையினரே பதிலளித்திருப்பது நீதிபதிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
எந்த மாநிலத்தின் போலீசார் இப்படியான பதிலை கூறியிருப்பார்கள் என யூகிக்க முடிகிறதா? வேறெங்கும் இல்லை. சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பிரபலமான உத்தர பிரதேசத்தில்தான் நடந்திருக்கிறது.
அதாவதும், 386, 195 கிலோ என இருவேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 586 கிலோ கஞ்சாவில் 500 கிலோ கஞ்சாவை கிடங்கில் இருந்த எலிகள் தின்று தீர்த்து விட்டதாக போதை மருந்துகள் மற்றும் உளவியல் மருந்துகள் சட்ட நீதிமன்றத்தில் (Narcotic Drugs and Psychotropic Substances Act (1985) court) மதுரா போலீசார் தெரிவித்திருப்பதுதான் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அந்த கஞ்சாவின் மதிப்பு கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் கூறியதை அடுத்தே மதுராவின் ஷேர்காஹ் மற்றும் நெடுஞ்சாலை காவல் நிலைய போலீசார் இவ்வாறு பதிலளித்திருக்கிறார்கள். இது பற்றி காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “எலிகள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் போலீசாருக்கு அவைகள் பயப்படுவதில்லை” என்றுக் கூறியதோடு, “எலிகள் தின்று தீர்த்த கஞ்சாவை தவிர எஞ்சியவற்றை காவல்துறையினர் அழித்துவிட்டார்கள்” என்றும் கூறியிருக்கிறார்.
இதனையறிந்து அதிர்ந்துப்போன நீதிபதிகள், போதை பொருட்களை ஒழிப்பதற்காக ஐந்து வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறைக்கு வழங்கியதோடு, போதை பொருட்களை எலிகள் சாப்பிட்டதற்கான ஆதாரத்தை தாக்க செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 26ம் தேதி ஒத்திவைத்திருக்கிறார்கள்.
முன்னதாக இதேப்போன்றதொரு வழக்கில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 195 கிலோ போதை பொருட்களை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக காவல்துறையினர் கூறியதன் மீது நீதிமன்றம் ஆதாரத்தை கேட்டும் அதனை போலீசார் சமர்ப்பிக்காமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.