டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா(86) உடல் நலக் குறைவால் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்தன் டாடாவின் உயிர் பிரிந்தது.
அடிக்கடி ரத்த அழுத்தம் அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பது அவரது உடல்நலத்தை பாதித்து வருவதாகவும், ஆகவே அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவின் கீழ் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரத்தன் டாடா மறைவிற்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டாடா குழுமத்தின் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "ஒட்டுமொத்த டாடா குடும்பத்தின் சார்பாக, அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் போராடிய கொள்கைகளை நிலைநிறுத்த பாடுபடும்போது, அவரது மரபு தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனது பணிவு, இரக்கம் மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்பணிப்பு கொண்டவர் ரத்தன் டாடா என்று பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் தன்னுடைய இரங்கல் செய்தியில், “பாரதத்தின் உண்மையான ரத்தன் ஸ்ரீ ரத்தன் டாடா ஜியை இழந்துவிட்டோம்.
அவரது வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும், அவர் தொடர்ந்து நம் இதயங்களில் வாழ்வார். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.
டாடா குழும தலைவராக ரத்தன் டாடா 1991 முதல் 2012 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அவர் தலைவராக இருந்தபோது டாடா குழுமம் வேகமாக வளர்ந்தது. பல்வேறு நிறுவனங்களையும் விலைக்கு வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில், “ரத்தன் டாடா மறைவால் ஆழ்ந்த வருத்தமுற்றேன். இந்திய தொழில்துறையின் உண்மையான டைட்டன் மற்றும் பணிவு மற்றும் இரக்கத்தின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர் ரத்தன் டாடா.
அவரது தொலைநோக்கு தலைமை டாடா குழுமத்தை வடிவமைத்தது மட்டுமல்லாமல், நெறிமுறை வணிக நடைமுறைகளுக்கு உலகளாவிய அளவுகோலையும் அமைத்தது. தேசத்தைக் கட்டியெழுப்புதல், கண்டுபிடிப்புகள் மற்றும் பரோபகாரம் ஆகியவற்றில் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு மில்லியன் கணக்கான உயிர்களின் மீது அழியாத தாக்கத்தை பதித்துள்ளது.
இந்தியா ஒரு ஜெயிண்ட்டை இழந்துவிட்டது, ஆனால் அவரது பாரம்பரியம் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். இந்த ஆழ்ந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.