இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி உயிரிழந்தார். எனினும், அவருடைய சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி அவரிடம் நெருக்கமாகப் பழகிய பிரமுகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் அவரைப் பற்றிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Kaun Banega Crorepati சீசன் 16இன் எபிசோடில், திரைப்படத் தயாரிப்பாளர் ஃபரா கான் மற்றும் நடிகர் போமன் இரானி, நடிகர் மாதவன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வை அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கினார். அப்போது ரத்தன் டாடா தன்னிடம் பணத்தைக் கேட்ட சுவாரஸ்யமான நிகழ்வைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர், “நான் ஒருமுறை ரத்தன் டாடாவுடன் லண்டனுக்கு விமானத்தில் சென்றேன். இருவரும் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கினோம். அப்போது, ரத்தன் டாடா அவரது ஊழியர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை உணர்ந்தார். இதையடுத்து, அவர்களை அழைக்க போன் பூத்திற்கு சென்றார். ஆனால் அதற்கும் அவரிடம் பணம் இல்லை. அந்தச் சமயத்தில் அவர் திரும்பிவந்து என்னிடம், ’அமிதாப், நான் உங்களிடம் கொஞ்சம் கடன் வாங்கலாமா? போன் செய்ய என்னிடம் பணம் இல்லை’ எனக் கேட்டார். அவர், இதைச் சொன்னதைக் கேட்டு என்னால் நம்ப முடியவில்லை. அவரது வேண்டுகோளைக் கேட்டு நானே வியந்துபோனேன். பின்னர், என்னிடமிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், இன்னொரு உரையாடலயும் நினைவுகூர்ந்தார். ”ரத்தன் டாடாவுடன் என் நண்பரின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். நிகழ்ச்சிக்குப் பிறகு ரத்தன் டாடா என் நண்பரிடம், 'என்னை வீட்டில் இறக்கிவிட முடியுமா? நான் உங்கள் வீட்டிற்குப் பின்னால்தான் வசிக்கிறேன்’ எனக் கேட்டார். அதாவது, தன்னிடம் கார் இல்லை என்பதைத்தான் அவர் வெளிப்படையாகச் சொல்கிறார். இதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா” என அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். சோனி டிவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
அமிதாப் பச்சனுக்கும் ரத்தன் டாடாவுடன் தொழில்முறை ரீதியாகவும் தொடர்பு இருந்தது. டாடாவின் தயாரிப்பு நிறுவனமான டாடா இன்போமீடியா லிமிடெட், அமிதாப் பச்சன் நடித்த ’ஏட்பார்’ படத்தைத் தயாரித்திருந்தது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெருத்த தோல்வியைச் சந்தித்தது. இதனால், டாடா குழுமத்திற்கு சுமார் ரூ.3.5 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமிதாப் பச்சன், “ஒரு சகாப்தம் முடிவடைந்துவிட்டது. மிகவும் மரியாதைக்குரிய, அடக்கமான, ஆனால் தொலைநோக்கு பார்வை மற்றும் தீர்க்கமான தலைவர். நாங்கள் ஒன்றாக ஈடுபட்ட பல செயல்களில் அவருடன் சில அற்புதமான தருணங்களை கழித்தோம்” எனப் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, ஐபிஎஸ் மென்பொருள் நிர்வாகத் தலைவர் வி.கே.மேத்யூஸும், ரத்தன் டாடா நினைவலைகள் குறித்துப் பகிர்ந்திருந்தார். அவர், ”அமெரிக்கப் பயணத்தின்போது ரத்தன் டாடாவுடன் சிறிது நேரம் செலவழிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, அந்த பயணத்தின்போது இரண்டு சம்பவங்கள் எப்போதும் என்னுடன் இருக்கும். அங்கு ஒருநாள் காலை, நாங்கள் நியூயார்க்கில் உள்ள அவரது சொந்த ஹோட்டலில் ஒன்றாக காலை உணவைச் சாப்பிட்டோம், இருப்பினும், அவரது அறிவுறுத்தலின் பேரில், அவர் சேவை செய்யும் ஊழியர்களிடம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. இது, அவருடைய எளிமையைக் காட்டியது” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.