சுற்றுப்புறச்சூழலை சுகாதாரமாக வைத்திருக்கவில்லை எனச் சொல்லி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி நடுத்தர வர்க்க ஹோட்டல் உள்ளிட்ட உணவு விடுதிகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுப்பதுபோல, பெரிய பெரிய ரெஸ்டாரென்ட்களிலும் இந்த கெடுபிடிகளை கறாராக அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து மக்கள் மத்தியில் வலியுறுத்தப்பட்டு வருவதுண்டு.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள மெக்டோனல்ஸ் உணவகத்தில் கழிவறையில் இருந்து வந்த எலி ஒன்று சாப்பிடும் இடத்திற்கு வந்து வாடிக்கையாளர்களை தலைதெறிக்க ஓடச் செய்திருக்கிறது. அதன்படி ஐதராபாத்தின் SPG ஹோட்டலில் எட்டு வயது சிறுவனை உணவகத்தில் இருந்து வந்த எலி கடித்ததை அடுத்து மெக்டோனல்ஸ் நிறுவனம் மீது சிறுவனின் பெற்றோர் புகாரளித்திருக்கிறார்கள்.
கடந்த மார்ச் 8ம் தேதியன்று அந்த 8 வயது சிறுவன் தனது பெற்றோருடன் மெக்டோனல்ஸ் உணவகத்துக்கு சாப்பிட சென்றபோதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது கழிவறையில் இருந்து வந்த எலி ஒன்று அங்கிருந்தவர்களை அதிர வைத்ததோடு, சிறுவனின் ஆடைக்குள் நுழைந்து அச்சிறுவனின் தொடையில் கடிக்கவும் செய்திருக்கிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக போவன்பள்ளியில் உள்ள மருத்துவமனையில் ரேபிஸ் மற்றும் டெட்டனஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அடுத்த நாளான மார்ச் 9ம் தேதியன்று அந்த மெக்டோனல்ஸ் உணவகம் மீது சிறுவனின் பெற்றோர் போலீசில் புகாரளித்திருக்கிறார்கள்.
அதன்படி, சிறுவனின் இடது காலில் இரண்டு காயங்கள் இருப்பதாகக் கூறி குடும்பத்தினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். அடுத்த மூன்று நாட்களில் சிறுவனுக்கு மேலும் இரண்டு ரேபிஸ் தடுப்பூசிகள் போட வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்களாம்.
தங்களின் இந்த நிலைக்கு காரணமான உணவக ஊழியர்கள் மீது கவனக்குறைவாக இருந்ததற்காக நடவடிக்கை எடுக்கும்படி சிறுவனின் தந்தை புகார் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசாரும் முதல் தகவல் அறிக்கை பதிந்த பிறகு தெரிவித்திருக்கிறார்கள்.