காஷ்மீர் தேர்தல் களத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார் ரஷீத் இன்ஜினியர் : நாடாளுமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு பாரமுல்லா தொகுதி எம்.பியாக தேர்வான இவர், தற்போது சட்டமன்றத் தேர்தலிலும் ஜம்மு-காஷ்மீரின் பழம்பெரும் கட்சிகளுக்கு சிம்ம-சொப்பனமாக இருக்கிறார்.
ரஷீத் இன்ஜினியர் கட்சிக்கு இன்னும் தேர்தல் அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை என்றாலும், இன்று காஷ்மீர் தேர்தல் களத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவதே இவரது அவாமி இத்திஹாத் கட்சிதான். சிறையில் அடைக்கப்பட்டதால் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியாத நிலையிலும், முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மற்றும் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லாவை மக்களவைத் தேர்தலில் தோற்கடித்தவர் ரஷீத் இன்ஜினியர்.
பிரிவினைவாத மொழி பேசும் இவரது ஆதரவாளர்கள் 34 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். சென்ற முறை போல இந்த முறையும் இன்ஜினியர் ரஷீத் கட்சி வாக்குகளை அள்ளினால், ஆட்சியைப் பிடிக்கலாம் என தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி கண்டு கொண்டிருக்கும் கனவு நனவாகாது என்று காஷ்மீர் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
திகார் சிறையில் 2019 ஆம் வருடம் முதல் அடைக்கப்பட்டு இருந்த ரஷீத் இன்ஜினியர் திடீரென இப்போது பிணை பெற்றது எப்படி எனவும் கேள்வி எழுந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசு மூலமாக திரை மறைவில் காய்களை நகர்த்தி இன்ஜினியர் ரஷீத் உள்ளிட்டோர் மூலம் தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணியை பலவீனப்படுத்துகிறதா? என்கிற சந்தேகம், காஷ்மீரில் பலருக்கும் இருக்கிறது.
பாஜகவுக்கு காஷ்மீர் பகுதியில் செல்வாக்கு இல்லை எனவும் ஜம்முவில் கிடைக்கக்கூடிய இடங்களை மட்டுமே நம்பி அந்தக் கட்சி தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள். இத்தகைய சூழ்ச்சிகளை முறியடித்து தங்களது கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவர் சுப்ரியா ஸ்ரீநேத்.
இதற்கு பதிலளித்துள்ள அவாமி இத்திஹாத் கட்சி வேட்பாளர் ஷேக் ஆஷிக், சில கட்சிகள் தோல்வியை தழுவ இருப்பதை உணர்ந்துவிட்டதால் இதுபோன்று பொய்களை கூறிவருவதாக விமர்சித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாத நிலையில் காஷ்மீர் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், ரஷீத் இன்ஜினியர் மட்டுமல்லாமல் மேலும் பல பிரிவினைவாத குரல்கள் வலுவடைந்து வருகின்றன. அப்நி கட்சியைச் சேர்ந்த அல்டாப் புகாரி, மக்கள் மாநாடு கட்சியை சேர்ந்த சாஜ்ஜாத் லோன் போன்றோரும் பிரிவினைவாத ஆதரவு குரலில் முழக்கம் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் இதே பாதையை தேர்ந்தெடுத்துள்ளது. இப்படி ஒரே வாக்கு வங்கிக்கு பலர் போட்டியிடும் நிலையில், இன்ஜினியர் ரஷீத் இவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி சட்டமன்றத் தேர்தலில் முத்திரை பதிப்பாரா? என்பதை வாக்காளர்களே தீர்மானிப்பார்கள்.