கன்னித்தன்மை சோதனையில் தோற்றதால் ரூ.10 லட்சம் அபராதம்! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

கன்னித்தன்மை சோதனையில் தோற்றதால் ரூ.10 லட்சம் அபராதம்! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
கன்னித்தன்மை சோதனையில் தோற்றதால் ரூ.10 லட்சம் அபராதம்! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
Published on

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் கன்னித்தன்மை சோதனையில் தோல்வியுற்றதால் கணவர் குடும்பத்தினரால் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதுடன் ரூ.10 லட்சம் அபராதமும் அந்த குடும்பத்திற்கு விதிக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

ஒரு பெண் கன்னித்தன்மையுடன் உள்ளாரா அல்லது ஏற்கெனவே பாலியல் உறவில் ஈடுபட்டவரா என்பதை அறிந்துகொள்ள “virginity test" செய்யப்படுகிறது. இதுவே பல பெண்களின் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ராஜஸ்தானிலுள்ள பில்வாரா மாவட்டத்தில் இதுபோன்றதொரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பகோர் பகுதியில் வசிக்கும் சான்சி பழங்குடியனத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு கடந்த மே மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. அவர்கள் சமூக வழக்கப்படி திருமணமான முதல் நாளில் சுத்திகரிப்பு சடங்கு அல்லது குகாடி பிரதாவை பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அப்படி நடத்தப்பட்ட சடங்கில் அந்த பெண் கன்னித்தன்மை உள்ளவரா என்று பரிசோதிக்கப்படும். அப்படி அந்த சோதனையில் பெண் கன்னித்தன்மை அற்றவர் என்பது உறுதியாகிவிட்டால் பெண்ணின் குடும்பத்தார் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையாக கொடுக்கவேண்டும்.

அந்தப்படி ஏற்கெனவே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த 24 வயது பெண்ணை மாப்பிள்ளையின் குடும்பத்தார் அடித்து, கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை சோதனைக்கு ஆளாக்கியுள்ளனர். அதில் அந்த பெண் தோல்வியுறவே, அவரை மே 31ஆம் தேதி காப் பஞ்சாயத்தின் முன்பு நிறுத்தி, அவருடைய குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

அந்த பெண் திருமணத்திற்கு முன்பு தனது பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டடுள்ளார். இதுகுறித்து அந்த பெண் சுபாஷ் நகர் காவல்நிலையத்தில் கொடுத்த புகார் தற்போது விசாரணையில் உள்ளது. இதுகுறித்து அந்த பெண் தனது கணவர் குடும்பத்தாரிடம் கூறியபிறகு, மாமியார் மற்றும் கணவர் என அனைவரும் சேர்ந்து கடுமையாக தாக்கி, அடித்து கொடுமை படுத்தியுள்ளனர். மேலும் வீட்டைவிட்டு அந்த பெண் விரட்டியடிக்கப்பட்டதால், சனிக்கிழமை தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது அந்த பெண் வழக்குத் தொடர்ந்துள்ளார். மேலும் பணம் தரச்சொல்லி அடித்து கொடுமைபடுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசிய வீடியோவில், ‘’திருமணம் நடந்த தினத்தன்று மதியம் எனக்கு நடத்தப்பட்ட சடங்கில் நான் தோல்வியுற்றேன். அதன்பிறகு இரவு வரை அதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அப்போதிருந்த பயத்தால் நான் எதுவும் கூறவில்லை. அதன்பிறகு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரால் அடித்து தாக்கப்பட்டேன். அதன்பிறகு நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை குறித்து அவர்களிடம் தெரிவித்தேன்’’ என்று கூறியுள்ளார்.

அந்த பெண்ணின் மாமனார் தலைமை காவலர் என்பதும், அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து அவர் ஏற்கனவே தெரிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார் காவல் அதிகாரி சுரேந்திர குமார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com