பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீமுக்கு இரண்டே மாதத்தில் மீண்டும் பரோல்.. அதுவும் 50 நாட்கள்!

தனது சீடர்களை பாலியல் வல்லுனர்வுக்கு ஆளாக்கிய குர்மீத் சிங்கிற்கு 50 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் சிங்
குர்மீத் ராம் ரஹீம் சிங்pt web
Published on

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ குருசார் மோடியா கிராமத்தில் 19‌67 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்த குர்மீத்தை அவரது ஏழு வயதில், தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் ஷா சட்னம் சிங்-ஆல் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1990 ஆம் ஆண்டு, அமைப்பின் தலைவராக குர்மீத் ராம் ரஹிம் சிங்கை ஷா சட்னம் அறிவித்தார்.

2014 ஆம் ஆண்‌டு மெசஞ்சர் ஆப் காட் என்ற படத்தில் நடித்த குர்மீத், அடுத்தடுத்து 3 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வெள்ளித்திரையின் சூப்பர் ஹீரோக்களை மிஞ்சும் சாகசங்களை தனது திரைப்படத்தில் வெளிப்படுத்தும் குர்மீத், 17 கின்னஸ் சாதனைகள், 27 ஆசிய சாதனைகள் உட்பட 53 சாதனைகளை செய்ததாக குறிப்பிடப்படுகிறார். பல்லாயிரக்கணக்கான சீடர்களை கொண்ட குர்மீத் ராம் ரஹிம் சிங், பல சர்ச்சைகளுக்கும், வழக்குகளுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார்.

குர்மீத் ராம் ரஹீம் சிங் 1999 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டுவரையிலான காலத்தில் தனது 2 பெண் சீடர்களை பாலியல் வல்லுனர்வுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதை அடுத்து 2007 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலமும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்டன. இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பஞ்ச்குலா நீதிமன்றம் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என தீர்ப்பளித்தது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் பத்திரிக்கையாளர் ராம் சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் குர்மீத் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் குர்மீத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் குர்மீத் சிங்கிற்கு 50 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க வேண்டும் என்ற பல்வேறு காரணங்களுக்காக பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அவருக்கு மூன்று முறை பரோல் வழங்கப்பட்டது. கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் 21 நாட்கள் பரோல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2 வருடங்களில் அவருக்கு 7 ஆவது முறையாக பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் அவருக்கு வழங்கப்படும் 9 ஆவது பரோல் இது. கடந்த ஆண்டு மட்டும் அவருக்கு 91 நாட்களுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி நவம்பரில் 21 நாட்களும், ஜூலையில் 30 நாட்களும் ஜனவரியில் 40 நாட்களும் பரோல் வழங்கப்பட்டிருந்தது.

2022 ஆம் ஆண்டு அவருக்கு மூன்று முறை பரோல் வழங்கப்பட்டது. அக்டோபரில் 40 நாட்களும், ஜூன் மாதத்தில் ஒரு மாதம், பிப்ரவரியில் 21 நாட்களுக்கும் விடுவிக்கப்பட்டிருந்தார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஒருமுறை பரோல் வழங்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com