பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு பயந்து நித்யானந்தா வெளிநாடு தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா பக்தை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2010ஆம் ஆண்டு வழக்கு பதியப்பட்டது. இதுதொடர்பாக ராம்நகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நித்யானந்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே நித்யானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டது. விசாரணை முடியும் வரை நித்யானந்தாவின் பாஸ்போர்டை புதுப்பிக்கக்கூடாது என காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். அவர்களது கோரிக்கையை பாஸ்போர்ட் அலுவலகம் ஏற்றதாக தெரிகிறது. பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நித்யானந்தாவிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட இருந்தது.
இந்த நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நேபாள நாட்டுக்கு சாலை மார்க்கமாக சென்ற நித்யானந்தா, போலி பாஸ்போர்ட் மூலம் அங்கிருந்து பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள கெய்மன் தீவிற்கு சென்று தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது.