கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பாதிரியார் பிரான்கோ மூலக்கல் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அம்மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்டத்தின் பேராயராக இருந்தவர் பிரான்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். எனினும், அவர் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைக் கண்டித்தும், பிரான்கோவை கைது செய்யக்கோரியும் அந்த மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் இந்த விவகாரம் நாடு முழுவதும் கவனம் ஈர்த்தது.
இதன் காரணமாக, பாதிரியார் மூலக்கல், 2018-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீதான வழக்கு கோட்டயத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்து. அதில், பாதிரியார் மூலக்கல்லுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த தீர்ப்புக்கு பரவலாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கேரள அரசும், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியும் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அரசு தாக்கல் செய்த மனுவில், கன்னியாஸ்திரியை பாதிரியார் பிரான்கோ மூலக்கல் பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதற்கு ஏராளமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், அவற்றை விசாரணை நீதிமன்றம் முறையாக பரிசீலிக்கவில்லை. அதேபோல, சாட்சியங்களின் வாக்குமூலத்தையும் விசாரணை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.