“கடைசி கோட்டையும் விழுந்ததா?”: ரஞ்சன் கோகாய் நியமனம் குறித்து மதன் பி லோகூர் காட்டம்

“கடைசி கோட்டையும் விழுந்ததா?”: ரஞ்சன் கோகாய் நியமனம் குறித்து மதன் பி லோகூர் காட்டம்
“கடைசி கோட்டையும் விழுந்ததா?”: ரஞ்சன் கோகாய் நியமனம் குறித்து மதன் பி லோகூர் காட்டம்
Published on

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை எம்பி ஆக குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட்டது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மதன் பி லோகூர் கருத்து கூறியுள்ளார்.

இந்தியாவின் 46வது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரஞ்சன் கோகாய், 2018ஆம் ஆண்டு அக்டோடபர் 3ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி வரை பணியில் இருந்தார். இவர் தலைமை நீதிபதியாக இருந்த காலகட்டத்தில் அயோத்தி ராமர் கோயில் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை எம்பி ஆக குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மாநிலங்களை எம்.பி-யாக இதற்கு முன்னும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து கடந்த 1991 ஓய்வு பெற்ற ரங்கநாதன் மிஸ்ரா என்பவர், 1998-2004ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனாலும், இந்த நியமனம் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த நியமனம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மதன் பி லோகூர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு பேசும்போது, “நீதிபதி ரஞ்சன் கோகாய் எத்தகைய மரியாதைக்குரியவர் என்று சில காலமாக ஊகங்கள் எழுந்துள்ளன. எனவே, அந்த அர்த்தத்தில் இந்த நியமனம் ஆச்சரியமானதல்ல; ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், அது இவ்வளவு சீக்கிரம் நடந்துள்ளது. இது நீதித்துறையின் சுதந்திரம், சார்பற்ற தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை மறுவரையறை செய்கிறது. கடைசி கோட்டையும் விழுந்ததா?” என விமர்சித்துள்ளார்.

ஜனவரி 2018 இல், நீதிபதிகள் கோகாய், லோகூர், ஜே.செல்லமேஸ்வர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் முன் எப்பேதும் நீதிமன்ற வரலாற்றில் நடந்திராத வகையில், அப்போதைய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நடத்தை குறித்து கேள்வி எழுப்புவதற்காகவும் தங்களின் கருத்தை முன்வைப்பதற்காகவும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். குறிப்பாக வழக்குகள் ஒதுக்கீடு செய்வதில் சில பாரபட்சங்கள் நடப்பதாக இவர்கள் அனைவரும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

அப்போது, கோகாய் தன்னுடன் பணியாற்றிய சக நீதிபதிகளை ஆச்சரியப்படுத்தி இருந்தார். ஏனெனில், அவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆக அடுத்த இடத்தில் இருந்தார். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு அரசாங்கத்திற்கும் தலைமை நீதிபதி அலுவலகத்திற்கும் இடையிலான உறவிலுள்ள முரண்பாட்டை கவனத்திற்குக் கொண்டு வந்தது. ஆகவே அதன் மூலம் கேள்விகளை இவர்களின் நடத்தை எழுப்பி இருந்தது.

கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தில் இருந்த நாட்களில் அவரது சக ஊழியர்களில் ஒருவரான நீதிபதி ஜே. செல்லமேஸ்வர். அவர் கோகாய் நியமனம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்த நீதிபதி குரியன் ஜோசப் கருத்தை அறிய முடியவில்லை. மேலும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜோசப் மற்றும் செல்லமேஸ்வர் இருவரும் பதவியில் இருந்தபோது, ஓய்வூதியத்திற்குப் பிறகு அரசாங்கத்தால் எந்தவொரு பதவியையும் ஏற்க மாட்டோம் என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com