நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர் ரம்யா. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இவர் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதால் அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் பதிவில் ரம்யா ஒரு போட்டோஷாப் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி தன் மெழுகு சிலை மீது தானே திருடன் என எழுதிக் கொள்வது போல் உள்ளது. இந்த சர்ச்சை புகைப்படத்தை பார்த்த உத்தரப்பிரதேச வழக்கறிஞர் சையது ரிஷ்வான் அகமது என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோமதிநகர் போலீசார் ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய வழக்கறிஞர் சையது, ரம்யாவிடம் சர்ச்சை புகைப்படத்தை நீக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் மறுப்பு தெரிவித்ததால் போலீசாரிடம் புகார் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். தான் எந்தவொரு இயக்கத்தை சேராதவர் எனவும் சையது விளக்கம் கொடுத்துள்ளார்.