குடியரசுத் தலைவராக 3 ஆண்டுகளை நிறைவுச் செய்தார் ராம்நாத் கோவிந்த் !

குடியரசுத் தலைவராக 3 ஆண்டுகளை நிறைவுச் செய்தார் ராம்நாத் கோவிந்த் !
குடியரசுத் தலைவராக 3 ஆண்டுகளை நிறைவுச் செய்தார் ராம்நாத் கோவிந்த் !
Published on

குடியரசுத் தலைவராக பதவியில் அமர்ந்து நேற்றுடன் மூன்று ஆண்டுகளை நிறைவுச் செய்தார் ராம்நாத் கோவிந்த்.

இந்திய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்றார். அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்று நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்தன. இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் 3 ஆண்டுகள் பதவி காலத்தை நிறைவு செய்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

மேலும் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் "ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றதில் இருந்து இதுவரை ஜனாதிபதி மாளிகைக்கு 1 லட்சத்து 22 ஆயிரத்து 292 பேர் பார்வையாளர்களாக வந்து உள்ளனர். நோய்த் தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்தில் நாட்டு மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு குடியரசுத் தலைவரும், அவரது மனைவியும் மற்றும் குடும்பத்தினரும் ஆதரவாக உள்ளனர். பிரதமர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாதச் சம்பளத்தை வழங்கியுள்ள குடியரசுத் தலைவர் ஓர் ஆண்டுக்கான சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைத்துக் கொள்ள முடிவு செய்து உள்ளார்"

மேலும் "கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக துணை ஜனாதிபதியுடன் இணைந்து மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்களுடன் இரு முறை காணொலி காட்சி மூலம் உரையாடி இருக்கிறார். 19 மாநிலங்களுக்கும், 4 யூனியன் பிரதேசங்களுக்கும் சென்று இருக்கிறார். இதுவரை ஜனாதிபதி மாளிகையிலும், பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்ட சமயங்களிலும் 6,991 பேரை ராம்நாத் கோவிந்த் சந்தித்து இருக்கிறார். ஒரு நாளைக்கு ராணுவ வீரர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை, விவசாயிகள் முதல் தீயணைப்பு வீரர்கள் வரை சராசரியாக 20 பேரை அவர் சந்திக்கிறார்".

"மத்திய அரசின் 48 மசோதாக்களுக்கும், மாநில அரசுகளின் 22 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ள அவர், 13 அவசர சட்டங்களையும் பிறப்பித்து இருக்கிறார். இதுவரை 11 மாநிலங்களுக்கு ஆளுநர்கள், உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி, தலைமை தகவல் ஆணையர், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் ஆகியோரை நியமித்து இருக்கிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com