ராகுல்காந்தி ஒரு பட்டியலின பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் - ராம்தாஸ் அத்வாலே
ராகுல்காந்தி ஒரு பட்டியலினப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியிருக்கிறார்.
ராகுல்காந்தி திருமணம் செய்துகொள்ளாதது மீண்டும் ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. சமீபத்தில் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசியபோது, ’’நாம் இருவர் நமக்கு இருவர்’’ என்றுதான் அரசு செயல்படுகிறது என விமர்சித்து பேசினார்.
ராகுலின் இந்த கருத்தை விமர்சித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ‘’நாம் இருவர் நமக்கு இருவர் என்ற வாக்கியம் குடும்ப கட்டுப்பாட்டு விளம்பரத்திற்குத்தான் பயன்படுத்தப்பட்டது. அதை ராகுல் விளம்பரப்படுத்த விரும்பினால் அதற்கு முதலில் திருமணம் செய்துகொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக மகாத்மா காந்தியின் சாதி மறுப்பு கொள்கையை நிறைவேற்றும் விதமாக பட்டியலினப் பெண்ணையே திருமணம் செய்துகொள்ள வேண்டும். பின்பு இளைஞர்களை ஊக்குவிக்க இதைப் பயன்படுத்தலாம்’’ என்று விமர்சித்தார்.
ராம்தாஸ் 2017-ஆம் ஆண்டே, ’’ராகுல்காந்தி பட்டியலினத்தவர்களின் வீடுகளுக்கு செல்கிறார். அங்கு உணவு சாப்பிடுகிறார். அவர் இன்னும் ஒருபடி மேல் சென்று மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்ற வேண்டும். அவர் ஒரு பட்டியலினப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும்’’ என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.