உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், இதில் பொதுமக்களும் தங்களது கருத்துக்களை ஜனவரி 28 ஆம் தேதிவரை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த இறுதி தேதி இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவுகளில் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லையெனில், அந்த இடங்களை பொதுப்பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. ஜேஎன்யூ மாணவர் சங்கம் இதை எதிர்த்து போராட்டத்தை அறிவித்துள்ளது.
தமிழகத்திலும் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எத்தகைய தருணங்களில் ரத்து செய்யலாம் என்பதற்கான வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது
அதன்படி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பும் போது, ஏதேனும் ஒரு பணியிடத்தை நிரப்ப தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்றால், அப்பணியிடத்திற்கான இட ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் ரத்து செய்து கொள்ளலாம். அதன் பின்னர் அந்த இடத்தை பொதுப்பிரிவுக்கு மாற்றி தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று யு.ஜி.சி அறிவித்துள்ளது.
இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் பணியிடம் சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்ததாக இருந்தால், அது தொடர்பான முடிவை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக செயற்குழுவே எடுத்துக்கொள்ளலாம்; ஏ மற்றும் பி பிரிவைச் சேர்ந்ததாக இருந்தால் அது குறித்து மத்திய அரசின் உயர்கல்வி அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிகளில் கூறப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த நடவடிக்கை சமூகநீதிக்கு சாவுமணி அடிப்பதற்கான செயல் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை” என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மனோதங்கராஜும் இது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், “பாஜகவின் "சப் கா விகாஸ்" (அனைவரின் வளர்ச்சிக்காக) என்பதின் உண்மை முகம் இதுதான்.
இதுவரை காலைப் பிடித்து இழுத்தவர்கள் இப்போது உச்சந்தலையில் கை வைத்து விட்டார்கள். இந்திய நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டு கொள்கையை கொலை செய்வதற்கான சம்மட்டி அடி இது.
சமூகத்தில் நிலவும் சாதி மேலாதிக்கத்திற்கு சட்டபூர்வமாக அங்கீகாரமும், பாதுகாப்பும் வழங்குவதே பாஜகவின் ராம ராஜ்யத்தில் "அனைவருக்குமான வளர்ச்சி" என்று இதன் மூலம் பொருள் கொள்ளப்படுகிறது. ஏற்கனவே நாடு முழுக்க பல கல்லூரிகள் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களை பொதுப்பிரிவினருக்கு தாரைவார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருக்கினறன. இந்த தவறான போக்கை சரிசெய்ய நாம் கோரிக்கை வைத்தால், பாஜகவோ அந்த தவறையே நிறுவமையப்படுத்துகிறது. ஒன்றிய அரசின் கீழ் உள்ள துறைகளில் இட ஒதுக்கீட்டில் வரும் பணியிடங்களில் பாதிக்கு பாதி நிரப்பப் படாமலேயே உள்ளன. அவற்றை எப்போது நிரப்புவீர்கள் என்று பலவருடங்களாக பாராளுமன்றத்தில் நாம் கேள்விகளை எழுப்பி வருகிறோம். நாம் எழுப்பும் கேள்விக்கு பாஜகவின் தீர்வு இது போன்ற அரியவகை "சப் கா விகாஸ்" ஆக இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் ஏற்றதாழ்வை போதிக்கும் ஆரிய சனாதான சாதீய பாகுபாடு பாஜக-விற்கு இவ்வாறே கற்றுக் கொடுத்து இருக்கிறது. இந்தியாவில் வாழும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் வஞ்சகம் செய்து அமர மக்களை அழித்து ஒழிக்கும் பாஜகவின் முயற்சியை சமத்துவம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்டஅனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.