அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நேரில் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பல்லாண்டு கால சட்டப் போராட்டங்களுக்கு பின்னர், உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு, கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பில் மற்றொரு முக்கிய அம்சமாக, அயோத்தியில் முக்கிய இடத்தில் மசூதி கட்டிக்கொள்ளவும் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை கோவில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அயோத்தியில் 161 அடி உயரத்தில், 5 கோபுரங்களுடன் பிரமாண்டமாக அமையப்போகிற ராமர் கோயிலுக்கு பூமி பூஜை, வருகிற 5 ஆம் தேதி கோலாகலமாக நடக்கிறது.
ஆனால் இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு யாத்திரைகள் கூட்டங்கள் என முயற்சிகளை எடுத்தவர் அத்வானி. அதேபோல மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதற்கான முன்னெடுப்புகளை தீவிரமாக எடுத்தவர். ஆனால் இருவருக்கும் ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் என்பதால் 10 வயதுக்கு குறைவானவர்களும் 65 வயதுக்கும் மேலே இருப்பவர்களும் பொது வெளியில் வரக் கூடாது என்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள கூடாது என்பதும் விதி என்பதால் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. இதேபோல உத்தரப் பிரதேசம் மாநிலம் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்குக்கும் அழைப்புக் கொடுக்கப்படவில்லை. இந்த மூவரும் 65 வயதை கடந்தவர்கள்.
அத்வானிக்கு 92, முரளி மனோகர் ஜோஷிக்கு 86, கல்யாண் சிங்குக்கு 88 வயதாகிறது. பிரதமர் மோடிக்கு 69 வயதாகிறது என்பதால் அவரும் நேரடியாக அயோத்திக்கு சென்று ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பங்கேற்காமல் காணொலி காட்சி மூலம் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.